எதுவா இருந்தாலும் மேல வந்து பேசு - அரசு பேருந்துக்குள் அடிதடி 05-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழிவிடுவதில் 2 அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழிவிடுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேருந்தின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர் தாக்கி கொள்ளும் காட்சிகள் தான் இவை...

சென்னை கொரட்டூர் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த எல்70 மாநகர பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளது. அப்பேருந்தில் முன்னால் நின்று கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்தை வழிவிடுமாறு எல்70 பேருந்தின் ஓட்டுநர் சிவானந்தம் கேட்டுள்ளார். அப்போது, முன்னால் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் புண்ணியமூர்த்தியும் நடத்துநர் பாலகுமாரும் அவரிடம் உங்கள் பேருந்து செல்ல வழி உள்ளது அதில் செல்லுமாறு சொன்னதாகக் கூறப்படுகிறது.

ஆனால், எல்70 பேருந்து ஓட்டுநர் சிவானந்தம் எதுவாக இருந்தாலும் பேருந்தின் உள்ளே வந்து பேசுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து, ஓட்டுநர் புண்ணியமூத்தியும், பாலகுமாரும் எஸ்70 பேருந்தின் உள்ளே சென்று அவரிடம் பேசி கொண்டிருந்த போது, பேருந்தின் கதவுகளை மூடி பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளார் சிவானந்தம்.

இதனால், அதிர்ச்சியடைந்த மற்றொரு அரசு பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேருந்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சிவானந்தமோ அதனை எல்லாம் காதில் வாங்கி கொள்ளாமல் பேருந்து அடுத்த நிறுத்தத்தில் தான் நிற்கும் என்று கூறி பேருந்தை தொடர்ந்து இயக்கியுள்ளார். ஒரு கட்டத்தில் ஓட்டுநர் புண்ணியமூர்த்தி எல்70 பேருந்தின் கியர் ராடை பிடித்து இழுத்து பேருந்தை இயக்கவிடாமல் செய்துள்ளார்.

இதனால், கடும் கோபமடைந்த ஓட்டுநர் சிவானந்தம், அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளார். இதையடுத்து, பதிலுக்கு ஓட்டுநர் புண்ணியமூர்த்தியும், நடத்துனர் பாலகுமாரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால், பேருந்தில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்த நிலையில், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக தேர்தல் ஆணையத்தின் எதிரே சாலையிலே பேருந்தை நிறுத்தி அரசு பேருந்து ஊழியர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புக்காக இருந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருதரப்பினருக்கு இடையே சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தார். 

ஆனால், எல்70 பேருந்தின் நடத்துநர் ஈஸ்வரனோ, மோதிக்கொண்ட மூவரையும் தடுக்காமல், சண்டையை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தார். 

ஒருவழியாக பேருந்தை அங்கிருந்து எடுத்து சென்றதால் பயணிகள் நிம்மதியடைந்தனர். போக்குவரத்து ஊழியர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

varient
Night
Day