அசத்திய ஆட்டிசம் குழந்தைகள் - கடலில் நீந்தி உலக சாதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆட்டிசம் குறைபாட்டை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடலூரில் இருந்து சென்னை வரை, சுமார் 165 கிலோ மீட்டர் கடலில் நீந்தி, ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் உலக சாதனை படைத்துள்ளனர். ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள், தன்னம்பிக்கையுடன் 4 நாட்கள் கடலில் நீந்தி உலக சாதனை படைத்த நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....

ஆட்டிசம் என்பது மூளைக்கு வரும் தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கும் குறைபாடாகும். இதனால் பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல், மனிதர்களின் நடவடிக்கைகள் மாறிப்போவதே ஆட்டிசம் எனப்படுகிறது. 

ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே தவிர நோயல்ல. இதைச் சரியான காலத்தில் அடையாளம் காணாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் வீணாகிவிடும் என கூறப்படுகிறது. 

இந்தக் குறைபாட்டை விரைவில் கண்டறிவதன் மூலம் குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியும் என்றும், இவ்வகைக் குறைபாடு உள்ள குழந்தைகள், அதீத புத்திசாலியாக இருக்கவும் வாய்ப்புண்டு என்றும் கருதப்படுகிறது. அதேநேரம், புத்திசாலித்தனத்துக்கும் ஆட்டிசம் குறைபாட்டிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

இந்நிலையில், இத்தகைய ஆட்டிசம் குறைபாடுள்ள 14 குழந்தைகள்தான், தன்னம்பிக்கையுடன் கடலில் நீந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதுடன், உலக சாதனையும் படைத்துள்ளனர்.

கடந்த ஒன்றாம் தேதி முதல் 4ம் தேதி வரையிலான 4 நாட்கள், ஆட்டிசம் குறைபாடுள்ள 9 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் கடலூரில் இருந்து சென்னை வரையிலான, 165 கிலோமீட்டர் தூரத்தை கடலில் நீந்தி உலக சரித்திரம் படைத்துள்ளனர்.

அனைவரையும் வியக்க வைக்கும் வகையில், தன்னம்பிக்கையுடன் நீந்தி கரைசேர்ந்த ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, சென்னை மெரினா கடற்கரையில் நிறைவு விழா நடைபெற்றது. 

இந்த நிறைவு விழாவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் மேகநாத ரெட்டி மற்றும் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் கலந்துகொண்டு, குழந்தைகளை வெகுவாக பாராட்டினர்.

இதனைத் தொடர்ந்து உலக சாதனை படைத்த குழந்தைகளை பாராட்டி, world record of union என்ற அமைப்பு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்தது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை முன்னிலைப்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.  எல்லா குழந்தைகளையும் போல், அவர்களும் சாதனையாளர்கள்தான் என்றும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளாலும் சாதிக்க முடியும் என்பதற்கு, இந்த நிகழ்வு நல்ல ஒரு உதாரணம் என்றும் சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்தார். 

இந்த உலக சாதனை மூலம், மற்ற குழந்தைகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூப்பித்துள்ளதுடன், ஆட்டிசம் தடுப்பு குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர் இந்த சிறப்பு குழந்தைகள்....

Night
Day