உதகை, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மற்றும் கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது.

கோடை விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி, கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.  இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனம் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் எனக் கடந்த 13 ஆம் தேதி உத்தரவிட்டது. 

அதன்படி, இன்று முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து, சரக்கு வாகனங்கள், நீலகிரி பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில், முதல் நாளான இன்று நீலகிரி, கேரளா எல்லையில் உள்ள நாடுகாணி சோதனை சாவடியில் ஏராளமான வாகனங்கள் குவிந்ததால் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்கள் புதிய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது. வத்தலக்குண்டு அடிவாரம் பகுதி காமக்காப்பட்டி சோதனை சாவடியிலும் மற்றும் பழனி மலை அடிவாரப் பகுதிகளில் இ-பாஸ் சோதனை செய்த பின்பு வாகனங்கள் மலைப்பகுதிகளில் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Night
Day