எழுத்தின் அளவு: அ+ அ- அ
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள சிலி நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக்குக்கு விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிலி அதிபர் கேப்ரியல் போரிக், முதல் முறையாக இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் அவரை மத்திய இணையமைச்சர் பபித்ரா மார்க்கரிட்டா வரவேற்ற போது, சிலி அதிபருக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இந்தியா, சிலி நாடுகளிடையிலான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த வந்துள்ள சிலி அதிபர் கேப்ரியலுடன், அமைச்சர்கள், நாடாளுமன்ற எம்.பி.க்கள், உயர் அதிகாரிகள் , வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்கள் குழு உடன் வந்துள்ளது.
இதையடுத்து சிலி நாட்டு அதிபர் கேப்ரியல் போரிக், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள வருகை புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சிலி அதிபர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. சிலி அதிபர் ஆக்ரா, மும்பை பெங்களுரு ஆகிய நகரங்களுக்கும் செல்ல உள்ளார்.