உதகையில் அத்துமீறிய யூடியூப்பர்கள்அபராதம் விதித்த வனத்துறை

எழுத்தின் அளவு: அ+ அ-

உதகையில் தடை செய்யப்பட்ட காப்பு காட்டிற்குள் நுழைந்து டிரோன் மூலம் வீடியோ பதிவு செய்த யூடியூபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் அத்துமீறி நுழைந்த யூடியூபர் யார்? என்பது குறித்த செய்திக்குறிப்பை தற்போது காணலாம்...

கையில் ஒரு செல்போன், அல்லது ஒரு கேமராவை வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட வனப்பகுதியை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவேற்றி அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்திய cherry vlogs சேனலின் உரிமையாளர் தான் இவர்...

காஞ்சிபுரத்தை சேர்ந்த தாகூர் சுரேஷ் பாபு என்ற நபர், யூடியூப்பில் cherry vlogs என்ற சேனலை நடத்தி வருகிறார். இவர் நீண்ட தூரம் பைக்கில் பயணிப்பது, வெளிநாடுகளுக்கு சென்று அங்கு நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். 

அந்த வகையில் இவர் உதகையின் இயற்கை அழகை ரசிக்க சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இவரது நண்பர்களான பைசல் ரகுமான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் உதகையை சுற்றிக் காட்டுவதாக கூறி பைக்கில் காப்பு காட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளனர். 

பின்னர் அவர்கள் அத்துமீறி டிரோன் கேமரா மற்றும் சில நவீன கேமராக்களை பயன்படுத்தி வனப்பகுதியை வீடியோ எடுத்தும், பைக்கில் கரடு முரடான பாதையில் பயணிப்பது போன்று வீடியோவும் எடுத்து யூடியூப்பில் பதிவேற்றியுள்ளனர். 

இந்த வீடியோ யூடியூப்பில் வைரலான நிலையில், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வாளர்கள் உதகை வனத்துறைக்கு புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் மூவரையும் உதகைக்கு அழைத்து, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்தது ஏன் என கேள்விகளை எழுப்பினர். இதனால் திகைத்து போன யூடியூப்பர் உள்ளிட்ட 3 பேர் தாங்கள் தெரியாமல் வந்துவிட்டோம் என மன்னிப்பு கேட்டு தப்பை ஒப்புக்கொண்டனர். இதனால் அதிகாரிகள் அவர்கள் 3 பேருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 

தடை செய்யப்பட்ட பகுதி என்பது தெரியாமல் இந்த இடத்தில் வீடியோ பதிவு செய்துவிட்டோம் என்றும், இதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக யூடியூபர் தெரிவித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து உரிய அனுமதி பெறாமல் யார் வீடியோ பதிவு செய்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் கௌதம் தெரிவித்துள்ளார்

பைக்கில் வீலிங் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, பிராங்க் செய்து பொதுமக்களை அச்சுறுத்தி தொல்லை கொடுப்பது, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் உரிய அனுமதி இல்லாமல் சென்று வீடியோ பதிவு செய்து அதிகாரிகளுக்கு தலைவலியை எற்படுத்துவது, போன்ற செயல்களில் ஈடுபடும் யூடியூபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day