அழியும் கலைக்கு உயிர் கொடுத்த தெருக்கூத்து கலைஞர்... வறுமையில் வாடும் அவலம்... 12-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

அழிந்து வரும் தெருக்கூத்து நாடகக் கலையை ஊக்குவித்து, அதற்கு உயிர் கொடுத்ததோடு, மத்திய அரசின் சங்கீத் நாடக அகாடமி விருது பெற்ற ஏழை கலைஞரின் 50 ஆண்டு கால கலை சேவை குறித்தும், தற்போது அவரின் நிலை குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாலவாடியை சேர்ந்தவர் 76 வயதான கந்தசாமி. வறுமை காரணமாக 5 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத சூழ்நிலையில், தனது 11 வயது முதல் நாதஸ்வரம் பயிற்சி பெற்ற அவர், தனது தந்தையுடன் நாதஸ்வர கச்சேரிக்கு சென்றுள்ளார். பின்னர், தனது பெற்றோர் மறைவிற்கு பின் சித்தப்பா உதவியால் நாடக கலையை கற்ற கந்தசாமி, 1971 ஆம் ஆண்டு பாலவாடியில் நடந்த நாடகத்தில் கோமாளி வேடம் அணிந்து தனது முதல் நாடக பயணத்தை தொடங்கினார்.

தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தெருக்கூத்து, மகாபாரதம், ராமாயணம் உள்ளிட்ட நாடகங்களில் நடித்தார். வருடத்தில் 300 நாட்கள் நாடகங்களில் நடித்து வந்த அவர், தனது 50 ஆண்டு கால கலை சேவையில் 15 ஆயிரம் நாடகங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார்.

நாடக நடிகர்களுக்கு அங்கீகாரம் வேண்டும் என்பதற்காக, 1991 ல் தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தை, உருவாக்கி நலிந்த நாடக கலைஞர்களுக்காக பாடுபட்ட கந்தசாமி, நடிகர்களுக்கான நல வாரியம் அமைக்கப்பட்ட போது அனைவருக்கும் பென்ஷன் பெற்றுத்தர உதவியுள்ளார்...

நாடகத்துறையில் கந்தசாமியின் சேவையை பாராட்டி 1995 ஆம் ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் குன்னக்குடி வைத்தியநாதன் அவருக்கு நாடக காவலர் சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில், 2004ஆம் ஆண்டு கலை முத்துமணி விருதும் வழங்கப்பட்டது. 

இதனிடையே, 2001- 2007 ஆண்டு காலகட்டத்தில், தெருக்கூத்து கலையில் ஆசிரியராக பணியாற்றிய கந்தசாமி, 500 பேருக்கு நாடகக் கலையை திறம்பட கற்றுக் கொடுத்தார். தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். 

கந்தசாமியின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சங்கீத நாடக அகாடமி விருதை அளித்தது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கந்தசாமிக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

பல்வேறு விருதுகள், பாராட்டுக்கள் பெற்ற போதும் தற்போது வரை கந்தசாமியின் குடும்பம்  வறுமையிலேயே உள்ளது. கந்தசாமியின் மகன் சலூன் கடை நடத்தி வரும் நிலையில், அரசு சார்பில் நாடக கலைஞர்களுக்கு வழங்கபடும், 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தொகையை பெற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். 

அவரது தந்தை கட்டிய, மண் சுவற்றுடன் கூடிய ஓட்டு வீட்டில் தற்போது வரை வசித்து வரும் அவருக்கு, மத்திய அரசு வழங்கும் தனிநபர் கழிப்பறை வசதி கூட இதுவரை கிடைக்கவில்லை என்பதுதான் சோகம். 

இதனிடையே, நாடக நடிகர்களுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகையை மாதம் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வறுமையில் வாடும் தங்கள் குடும்பத்தினருக்கு அரசு வீட்டு மனை அல்லது அரசு சார்பில் வழங்கப்படும் வீடு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என தெருக்கூத்து கலைஞர் கந்தசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அழிந்து வரும் பாரம்பரியம் மிக்க தமிழர்களின் கலையை தனது விடாமுயற்சியால் பாதுகாத்ததுடன், அதனை வளர்க்க தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்த தெருக்கூத்து கலைஞரின் சேவைக்கு, மாதம் மாதம் வழங்கப்படும் சொற்ப உதவித்தொகை எந்த வகையிலும் ஈடாகாது. ஆகவே, ஏழை கலைஞர் கந்தசாமியின் வேண்டுகோளின்படி அவர் வசிக்க வீடு ஒன்றையாவது தமிழக அரசு கட்டித்தர வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.

Night
Day