அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகிறது டிட்வா புயல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு இலங்கை அருகே நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று, புயலாக உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இலங்கை அருகே வங்கக் கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் டிட்வா புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள கடற்கரை வழியாக நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி டிட்வா புயல் நகர வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புயலுக்கு ஏமன் பரிந்துரைத்த டிட்வா என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதைபோல், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day