எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சோழ சாம்ராஜ்ஜியம் பாரதத்தின் பொற்காலங்களில் ஒன்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையை விரிவாகக் காண்போம்.
2 நாட்கள் பயணமாக சனிக் கிழமை இரவு தமிழகம் வந்த பிரதமர் மோடி, முதல் கட்டமாக தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தமது பயணத்தின் 2ம் நாளான ஞாயிற்றுக் கிழமையன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பிரம்மாண்ட விழாவில், பன்னிரு தேவார திருமுறை பாராயணம், இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை கேட்ட பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். “நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” என்றும் தமிழில் அவர் சிவனைப் போற்றினார். பிரகதீஸ்வரரின் பாதங்களில் அமர்ந்து வணங்கும் பாக்கியம் தமக்கு கிடைத்ததாக குறிப்பிட்ட அவர், 140 கோடி இந்தியர்களின் நலனுக்காகவும், இந்தியாவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காகவும் பிரார்த்தனை செய்ததாக கூறினார். அனைவருக்கும் சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புவதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு தொடங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, சோழர்களின் சாதனைகள் இந்தியாவின் பலத்திற்கு எடுத்துக்காட்டு என்றும் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் இரு பெயர்களும் பாரதத்தின் அடையாளங்கள் என்றும் புகழாரம் சூட்டினார். உலகம் முழுவதும் பேசும் நீர் மேலாண்மைக்கு சோழர்களே முன்னோடிகள் என்றும் அவர் கூறினார்.
இங்கிலாந்துக்கு முன்பே ஜனநாயகத்துக்கான முன்னோடி சோழராட்சி என புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் பிறப்பிடமாய் சோழர்களின் குடவோலை முறை திகழ்ந்தாக பெருமிதம் தெரிவித்தார். பண்பாட்டால் நாட்டை ஒருங்கிணைத்தவர்கள் சோழர்கள் என்றும் அவர் கூறினார். சோழப் பேரரசு இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்று என்றும், சோழப் பேரரசு இந்திய ஜனநாயகத்தின் தாய் என்ற பாரம்பரியத்தையும் முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.
சோழர்கள் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார மற்றும் ராணுவ உயரங்கள் இன்றும் நம்மை ஊக்குவிப்பதாகவும், சோழப் பேரரசு, வளர்ந்த இந்தியாவிற்கான ஒரு பண்டைய வரைபடத்தைப் போன்றது என்றும் குறிப்பிட்டார் பிரதமர் மோடி. வரவிருக்கும் காலங்களில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மைந்தன் ராஜேந்திர சோழன் இருவருக்கும் பிரம்மாண்ட சிலை தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார் பிரதமர் மோடி.
இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை யாராவது தாக்கினால், இந்தியா அதன் சொந்த மொழியில் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதை ஆபரேஷன் சிந்தூரின் போது உலகம் கண்டதாக பிரதமர் மோடி கூறினார். இன்று உலகமே நிலையற்ற தன்மை, வன்முறை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரச்சினைகளால் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், தீர்வுகளுக்கான பாதையை சைவ சிந்தாந்த கொள்கைகள் நமக்குக் காட்டுவதாக கூறிய அவர், அன்பே சிவம் என்ற திருமூலரின் கருத்தை உலகம் ஏற்றுக்கொண்டால், பெரும்பாலான நெருக்கடிகள் தானாகவே தீர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.