மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ் திரையுலகின் பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார். 


தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல நடிகராக திகழ்ந்தவர் நடிகர் டெல்லி கணேஷ். 1964 முதல் 1974ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றிய அவர், நடிப்புக்காக பணியை துறந்து 1976ம் ஆண்டு பாலச்சந்தரின் பட்டிண பிரவேசம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கமல்ஹாசன், ரஜினி, விஜய்காந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், குணச்சித்திரம், நகைச்சுவை உள்ளிட்ட கதாப்பாத்திரங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். குறிப்பாக அபூர்வ சகோதர்கள், அவ்வை சண்முகி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், தெனாலி உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் டெல்லி கணேஷ். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களிலும், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 

1979ம் ஆண்டு பசி திரைப்படத்திற்காக தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். 1993 மற்றும் 94ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதையும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார்.

80 வயதான அவர், கடந்த ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.30 மணியளவில் டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. அவரது மறைவு திரைப்பிரபலங்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாளை காலை 10 மணிக்கு டெல்லி கணேஷின் இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

varient
Night
Day