போதைப் பொருள் வழக்கு - நடிகர் கிருஷ்ணாவிடம் 20 மணி நேரம் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

போதைப் பொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில், நடிகர் கிருஷ்ணாவிடம் தனிப்படை போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வரும் நிலையில், பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகளை போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் அவர் போதை மருந்து உபயோகித்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து போதை மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் நடிகர் கிருஷ்ணாவும் இந்த போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளார். கிருஷ்ணா, தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவான இருந்த நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்நிலையில் கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய அவரை ஆயிரம்விளக்கு காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சோதனையின் முடிவில் கடந்த 45 நாட்களில் அவர் போதை பொருள் பயன்படுத்தவில்லை என தெரிய வந்துள்ளது.

இதனால், அடுத்த கட்டமாக அவருடைய செல்போன் தரவுகளை வைத்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களின் தொடர்பில் இருந்து உள்ளாரா? பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதா? என்ற கோணத்தில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் கைது நடவடிக்கையும் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் அதே வேளையில், பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Night
Day