எழுத்தின் அளவு: அ+ அ- அ
விண்வெளியில் இருந்து பூமியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு சென்று கொண்டிருக்கும் விண்வெளி வீரர்கள் தெரிவித்துள்ளனர். இது தனியொருவரின் சாதனையல்ல அனைவருக்குமான சாதனை என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை கேப்டன் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஃபால்கன் -9 ராக்கெட் உதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பயணம் செய்து வருகின்றனர். இன்று மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் அடையவுள்ளதாக கூறப்படும் நிலையில், சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களும் விண்வெளியில் இருந்து இணையக் காட்சி மூலம் செய்தியனுப்பினர்.
அப்போது பேசிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளியில் இருந்து நமஸ்காரம் என்று பேசினார். விண்வெளியில் இருந்து பூமியைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தற்போது ஐரோப்பா கண்டத்திற்கு மேல் பயணித்து வருவதாகவும் சுபான்சு சுக்லா தெரிவித்தார். மேலே எழும்ப முடிவது ஆச்சரியமான உணர்வைத் தருவதாகவும் வெற்றிடக் குழாயில் நன்றாக இருப்பதாக உணரவில்லை என்றும் தெரிவித்தார். இது தனியொருவரின் சாதனையல்ல என்றும் அனைவரின் ஒட்டுமொத்த சாதனை என்றும் கூறியுள்ளார். பயணத்தின் போது நீண்ட நேரம் தூங்கியதாகக் கூறிய சுபான்ஷு சுக்லா, அனைவருக்கும் புதிய சூழல் புதிய சவாலாக இருப்பதாக கூறினார். ஒரு குழந்தையைப் போல் கற்றுக் கற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள சுக்லா, குடும்பத்தினரின் ஆதரவு தான் பெரிது என்றும் கூறினார்.