எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஐடி ஊழியரை கடத்தி தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனனை வரும் 17ம் தேதி வரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான பார் ஒன்றில் ஐடி ஊழியருக்கும் நடிகை லட்சுமி மேனனின் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் நடந்த பிரச்னையில் ஐடி ஊழியரை காரில் கடத்திய லட்சுமி மேனின் தரப்பினர், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஐடி ஊழியர் அளித்த புகாரில் தாக்குதல் நடத்திய மிதுன், அனீஷ் மற்றும் சோனா ஆகியோரை கைது செய்த போலீசார், தலைமறைவான லட்சுமி மேனனை தேடி வந்தனர்.
இந்நிலையில் முன் ஜாமின் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் நடிகை லட்சுமி மேனன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனக்கும் ஐடி ஊழியர் தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை என விளக்கம் அளித்திருந்தார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் வரும் 17ம் தேதிவரை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தது.