சினிமாவின் 'டான்'... சிவகார்த்திகேயனுக்கு தாலாட்டு வாழ்த்துக்கள்....

எழுத்தின் அளவு: அ+ அ-

சினிமாவில் பெரிய நடிகா்களின் வாரிசுகள் மட்டும் கோலோச்சும் இடத்தில், எந்த ஒரு பின்புலம் இன்றி திறமையை மட்டும் நம்பி ஒரு படத்திலாவது அல்லது ஒரு காட்சியிலாவது நடிக்க வாய்ப்பு கிடைத்து விடாதா என ஏங்கி தவிக்கும் பலருக்கும் ஒற்றை நம்பிக்கையாகவும், வாழும் சான்றாகவும் இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.  தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியில் தொடங்கி இன்று முன்னணி கதாநாயகனாக உயர்ந்த அவர் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 1985  பிப்ரவரி 17-ம் தேதி தாஸ்-ராஜி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் சிவகார்த்திகேயன்.  தந்தை திருச்சியில் பணியாற்றி வந்ததால் அங்குதான் வளர்ந்தார். கல்லூரிக் காலத்தில் மிமிக்ரியில் தனித்திறமை பெற்றிருந்த அவர் அதனை முன்வைத்து மேடை நகைச்சுவையாளராக சின்னத்திரையில் அறிமுகமானார். 

மிமிக்ரி திறமையால் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதன் மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். 2008-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி முதன் முதலில் தொகுப்பாளாராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயனின், சின்ன சின்ன குறும்புகளும், நகைச்சுவை உணர்வும் சினிமா வாய்ப்பை பெற்றுத் தந்தது. சிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், 2012-ம் ஆண்டு இயக்குநர் பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன்பின்னர் 'மனங்கொத்திப் பறவை',  'கேடி பில்லா கில்லாடி ரங்கா' வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே ஆகிய படங்களில் தனது பாணியில் காமெடி மூலமாகவே கவனம் ஈர்த்தார். 

அடுத்தபடியாக ஆக்‌ஷன் படமான 'காக்கிச்சட்டை'யும் ஆக்‌ஷன் ப்ளஸ் காமெடி பாணியில் வெளியான 'ரஜினி முருகனும்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து முன்னணி நாயகிகளான கீர்த்தி சுரேஷ் உடன் 'ரெமோ', நயன்தாராவுடன் 'வேலைக்காரன்', சமந்தாவுடன் 'சீமராஜா' என பட்டையைக் கிளப்பினார். தற்போது வெற்றி நாயகனாக தொடர்கிறார். 

இந்த உலகம் ஜெயிச்சிருவேன்-னு சொன்னா கேட்காது. ஆனா, ஜெயிச்சவன் சொன்னா கேட்கும். நீ எது பேசுறதா இருந்தாலும் ஜெயிச்சிட்டு பேசு என்ற வரிகளுக்கு ஏற்ப தன்னை நிரூபித்து காட்டியிருக்கிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு நாமும் வாழ்த்துச் சொல்வோம்... 

Night
Day