ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: விஜய் தேவரகொண்டாவிடம் ED விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்ட விரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.

சட்டவிரோத சூதாட்ட செயலிகளை விளம்பரப் படுத்தியது தொடர்பாக அந்த விளம்பர படங்களில் நடித்த திரையுலக பிரபலங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமாக இருக்கும் வலைத்தளங்கள் ஆகியவற்றின் மீது ஹைதராபாத், செகந்திராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்குகளின் அடிப்படையில், சினிமா பிரபலங்களான பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா தக்குபாட்டி, மஞ்சு லட்சுமி, நிதி அகர்வால், அன்னைய்யா நாகலா, பிரணிதா சுபாஷ், ஸ்ரீமுகி, சியாமளா, யூடியூபர்கள் ஹர்ஷா சாயி, பையா சானியாதவ், லோக்கல் பே நானி உட்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கி இருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 30 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய வழக்கறிஞருடன் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நேரில் ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதன்பேரில் ஹைதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா விசாரணைக்காக நேரில் ஆஜரானார். 

Night
Day