ரிதன்யா தற்கொலை வழக்கில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரிதன்யா தற்கொலை வழக்கில் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரதட்சணை கொடுமையால் திருப்பூரை சேர்ந்த இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது கணவர், மாமனார், மாமியார் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ரிதன்யாவின் கணவர் குடும்பத்தினர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என ரிதன்யா கூறியதாகவும், இருதரப்பும் பொருளாதாரத்தில் சம அளவில் இருப்பதால் தங்களுக்கு வரதட்சணை தேவையில்லை எனவும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ரிதன்யா தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து வாதிட்ட ரிதன்யாவின் தந்தை தரப்பு, இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும், மனுதாரர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, அறிக்கை போதுமான தகவல்களுடன் முழுமையாக இல்லை என அதிருப்தி தெரிவித்தார். மேலும், ரிதன்யா உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லையே? ரிதன்யாவின் ஆடியோ பதிவு என்ன ஆனது?  அந்த ஆடியோ அவரது போனில் தான் ரெக்கார்ட் செய்யப்பட்டதா? நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர், ரிதன்யாவின் போனில் ஆடியோ ரெக்கார்ட் செய்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ரிதன்யா, கவின் இருவரின் செல்போன்களும் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, இந்த வழக்கில் ரிதன்யாவின் செல்போன் தடயவியல் சோதனை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிஉத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Night
Day