எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் இருந்த செயினை இளைஞர் பறித்து சென்ற அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த 40 வயதான ரோசி என்பவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று மாலை அவர் வீடு செல்வதற்காக பெருங்குடி ரயில் நிலையம் வந்த அவர், ரயில் நிலைய நடைமேடையில் இருந்த இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது ஆசிரியை அருகில் வந்த இளைஞர் ஒருவர் இங்கே அமராலாமா என்று கேட்டுள்ளார். அந்த இளைஞரை பார்த்ததும் சந்தேகம் வரவே, எந்த பதிலும் சொல்லாமல் ஆசிரியை பேசாமல் திரும்பிக் கொண்டிருந்தார்.
அருகே யாருமில்லாததை நோட்டமிட்ட அந்த இளைஞர், திடீரென ஆசிரியையின் கழுத்தில் இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி ஓடினார். ஆசிரியை கத்தி கூச்சலிட்டும் அந்த இளைஞர் ரயில் நிலையத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடி தலைமறைவானார். ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை இளைஞர் பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவந்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.