8.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் : ரஷ்யா-ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி

எழுத்தின் அளவு: அ+ அ-

ரஷ்யாவின் காம்சட்கா பகுதியில் ரிக்டர் அளவில் 8.8 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யா மற்றும் ஜப்பான்  தீவுகளை சுனாமி அலைகள் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுனாமி தாக்கியதன் காரணமாக ரஷ்யாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 8.8 ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் காரணமாக ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ரஷ்யா, ஈக்வடார், ஜப்பானின் கடலோர பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கின. கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கரையோர மக்கள் ஏற்கனவே அகற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிலி, சாலமன் தீவுகளில் கடல் அலைகள் 1 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு எழுந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். இதனிடையே சுனாமி தாக்கியதால் ரஷ்யாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

ரஷ்யாவை தொடர்ந்து ஜப்பானையும் சுனாமி அலைகள் தாக்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். ஜப்பானின் ஹொக்கைடோவின் மாகாணம், hanasaki துறைமுகத்தை சுனாமி அலைகள் தாக்கியது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஜப்பானில் இடைவிடாமல் சைரன் எச்சரிக்கை ஒலிக்கப்படுகிறது. தொடர்ந்து ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் இருந்து ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பான் கடற்கரையோர பகுதிகளில் இருந்து 20 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஜப்பானின் மேலும் பல பகுதிகளை சுனாமி தாக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். கடல் அலைகள் 50 செ.மீட்டர் அளவு எழுப்ப வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் ஹொக்கைடோ, கனகாவா மற்றும் வகயாமா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய 20 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ரஷ்யாவின் கம்சட்கா கடற்கரைப்பகுதியில் சுனாமியை உணர்ந்த வெள்ளை டால்பின்கள் ஜப்பான் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. டால்பின்களின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கிய நிலையில் கிழக்கு சீனா பகுதியை சுனாமி தாக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமியால் கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரத்திற்கு எழும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரையோரம் வசிக்கும் 3 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 

ரஷ்யா மற்றும் ஜப்பானை சுனாமி தாக்கிய நிலையில் அமெரிக்காவின் அலஸ்கா மாகாணம், ஹவாய் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஹவாய் தீவு மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஹவாய் தீவின் கடற்கரை பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக, எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மக்கள் வலிமையாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என தெரிவித்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கையைடுத்து அமெரிக்காவின் ஹவாய் தீவிலிருந்து அவசர, அவசரமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் தங்களது வாகனங்களில் வெளியேறுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து ஹவாய் தீவில் கடல் கடும் கொந்தளிந்து காணப்படுவதால் பதற்றமாக சூழல் நிலவியது.

இதனிடையே பசுபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள 10 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ரஷ்யாவின் காம்சட்கா தீபகற்பத்திற்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், ரஷ்யா, ஜப்பான், சீனா, உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது தைவான், பிலிப்பைன்ஸ், கனடா, மெக்சிகோ, பெரு, ஈக்வெடார், கொலம்பியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரஷ்யா ஜப்பானை சுனாமி அலைகள் தாக்கிய நிலையில் இந்தியாவை சுனாமி தாக்க வாய்ப்பில்லை என இந்திய கடல்சார் தகவல் மையம் தெரிவித்துள்ளது. எனவே, இந்திய கடலோர மக்கள் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் எனவும், வங்கக்கடல், அரபிக் கடல், இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Night
Day