மேட்ரிமோனியல் மூலம் ரூ.2.87 கோடி பறிப்பு... பெண்களை குறிவைக்கும் நைஜீரிய மோசடி கும்பல்... 12-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பழகி, திருமண பரிசு தருவதாகக்கூறி சென்னையை சேர்ந்த பெண்ணிடம் 2 கோடியே 87 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மோசடி பேர்வழிகள் சிக்கியது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை கே.கே நகரை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் ட்விட்டர் மூலமாக அறிமுகமான நபர் ஒருவர், தன்னிடம் வெளிநாட்டிலிருந்து பேசுவதாகக்கூறி நெருக்கமாக பேசி வந்ததாகவும், பின்னர் தனக்கு அந்த நபர் விலையுயர்ந்த பரிசு வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி,  பரிசு பொருள் அடங்கிய பார்சலை விமான நிலையத்தில் பெற்று கொள்ளுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

சில நாட்கள் கழித்து மும்பையிலிருந்து சுங்கவரித்துறை அதிகாரிகள் பேசுவது போல தொடர்பு கொண்ட நபர்கள், தனக்கு மலேசியாவில் இருந்து பிரபல கொரியர் மூலமாக பார்சல் ஒன்று வந்துள்ளதாகவும், அந்த பார்சலில் சட்டவிரோதமான போதை பொருட்கள் இருப்பதாகக்கூறி பயமுறுத்தியதாகவும், பின்னர் இதற்கான அபராத தொகையை உடனடியாக செலுத்த வில்லையென்றால் மும்பை போலீசார் 10 நிமிடத்தில் கைது செய்வார்கள் என தன்னை மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஸ்கைப் வீடியோ காலில் மும்பை போலீசாரின் சீருடையில் தோன்றி ஏற்கனவே இது போன்று ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறி அச்சுறுத்தியதாகவும், எனவே, போனை துண்டிக்காமல், தாங்கள் கூறும் ஜீபே மற்றும் வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்துமாறு அந்த நபர்கள் தன்னைக் மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பல தவணைகளில் ஜிபே மூலமாக 2 கோடியே 87 லட்சம் ரூபாயை அனுப்பியதாகவும், தொடர்ச்சியாக பணம் கேட்டு வந்ததால் மோசடி கும்பல் என்பது தெரியவந்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான தனிப்படை அமைத்து விசாரணையை துரிதப்படுத்தினர். மோசடி கும்பலுக்கு பணம் அனுப்பப்பட்ட G pay எண்ணை வைத்து விசாரித்தபோது, டெல்லியில் பல ஏடிஎம்களில் இருந்து மோசடி கும்பல் அந்த பணத்தை எடுப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து, டெல்லி விரைந்த தனிப்படை போலீசார் ஏடிஎம்களில் வந்து பணத்தை எடுத்த நபரின் புகைப்பட அடையாளங்களை சிசிடிவி பதிவுகள் மூலம் கைப்பற்றினர். அதில், மோசடி நபரின் முகம் பதிவாகாததால் அவரின் உருவம் மற்றும் அவர் அணிந்திருந்த செருப்பின் நிறத்தைக் கொண்டு விசாரணையை தொடர்ந்தனர்.

அதன்படி, மோசடி கும்பல், பணத்தை எடுக்க வரும் 20 ஏ.டி.எம்களில் 10 நாட்களாக காத்திருந்தனர். குறிப்பிட்ட நிறத்தில் செருப்பை அணிந்து வந்து பணத்தை எடுக்க வந்த இரண்டு நைஜீரியர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.

போலீசார்  அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கைது செய்யப்பட்டவர்கள் நைஜீரிய நாட்டை சேர்ந்த அகஸ்டின் மற்றும் சின்னொடூ என்பதும், இவர்கள் கடந்த ஐந்து வருடங்களாக டெல்லியில் வாடகை வீட்டில் தங்கி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், இந்த கும்பலின் தலைவன் நைஜீரியாவில் இருப்பதும், அங்கிருந்து, மோசடி கும்பலுக்கு, சைபர் க்ரைம் மோசடி குறித்து புதுப்புது வித்தைகளை பயிற்றுவித்து, அவர்களை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

அவ்வாறு பயிற்சி பெற்ற மோசடி கும்பலானது, ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், குறிப்பாக பெண்களை குறிவைத்து தங்கள் மோசடிகளை அரங்கேற்றி உள்ளனர்.

இந்த மோசடி கும்பலானது, பார்ட் டைம் ஜாப், இண்டர்வியூ, மேட்ரிமோனியல் என பல்வேறு வகைகளில் மோசடியில் ஈடுபடுவதும், மோசடியில் பெறும் பணத்தை உடனடியாக பல்வேறு வங்கி கணக்குகளில் பகிர்ந்து பல ஏடி.எம்களில் இருந்து பணத்தை எடுப்பதும் அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து டெல்லியில் கைது செய்யப்பட்ட நைஜிரியர்களை தனிப்படை போலீசார் சென்னை கொண்டு வந்தனர். மேலும், மோசடி கும்பலுக்கு மூளையாக செயல்படும் அவர்களது தலைவன் குறித்து கைதானவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிர்ஷ்ட குலுக்கல், புதிர் போட்டியில் வெற்றி என மக்களின் ஆசையை தூண்டி, பணத்தை பெற்று பின்னர் பார்சலில் செங்கல் அனுப்புவது தொடங்கி, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஏடிஎம் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று பணத்தை சுருட்டுவது வரை மோசடி கும்பல்கள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மோசடி உத்திகளை அப்டேட் செய்து பணம் பறித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற மோசடி கும்பல்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதோடு, மோசடி கும்பல்களை பிடிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

varient
Night
Day