பெண்ணுக்கு சரமாரி கத்திக்குத்து... முறை தவறிய உறவால் நேர்ந்த விபரீதம்...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ஆனைமலையை அடுத்த தமிழக-கேரள எல்லை பகுதியான வளந்தாயமரம் என்னும் இடத்தில் முறையற்ற உறவை துண்டித்துக்கொண்ட ஆத்திரத்தில் பெண்ணை ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. சினிமா காட்சிகளையே ரி-கிரியேட் செய்தாற் போல நடந்தேறிய இந்த சம்பவத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

கோவை ஆனைமலை அடுத்த தமிழக-கேரள எல்லை பகுதியான மீன்கரை ரோடு பகுதியை சேர்ந்த அஸ்வதி-ரகுநாதன் தம்பதிகளுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் 8 வயதில் பெண் குழந்தை உள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் அருகே உள்ள தனியார் லாட்டரி கடையில் அஸ்வதி வேலை செய்து வரும் நிலையில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இப்படி தம்பதிகளுக்குள் தகராறு ஏற்படும் போதெல்லாம் ரகுநாதனின் நண்பரான முரளி தம்பதிகளுக்குள் சமரசம் செய்து வைத்து வந்த நிலையில் இந்த வாடிக்கையான போக்கு ஒருகட்டத்தில் கணவனின் நண்பரான முரளிக்கு அஸ்வதிக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நெருக்கம் காலப்போக்கில் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய முறையற்ற உறவு ஏற்படும் அளவுக்கு நீண்டிருக்கிறது. 

கணவனிடம் அனுசரணையாக நடந்துக்கொள்ள மனைவிக்கு அறிவுரை கூறுகிறேன் என்ற பேரில், நண்பன் தன் மனைவிக்கே அனுசரணையாக மாறிய விவகாரம் ரகுநாதனின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதையடுத்து நண்பனின் பார்வை மனைவி அஸ்வதி மீது படாத வகையில் மீன்கரை ரோடு பகுதியில் இருந்து வெளியேறி ஆனைமலை அருகே உள்ள வளந்தாயமரம் பகுதியில் குடும்பத்தோடு குடிபெயர்ந்திருக்கிறார் ரகுநாதன். 

ஆனால் காதலுக்கு இருக்கும் அதே வலிமை முறையற்ற காதலுக்கும் உண்டோ என்னவோ..! எழு கடல் எழு மலை தாண்டி போனாலும் காதலை அணைப்போட்டு தடுக்க முடியாது என்ற ரேஞ்சுக்கு முரளி-அஸ்வதியின் முறையற்றக்காதல் கரைபுரண்டு ஓடியிருக்கிறது. இந்தநிலையில் லாட்டரி கடைக்கு வேலைக்கு சென்ற இடத்தில் முத்துகுமார் என்பவர் அறிமுகம் கிடைக்க அது அஸ்வதிக்கு மேலும் ஒரு முறையற்ற உறவு என்ற கட்டத்தை அடைந்திருக்கிறது. 

வீட்டில், பொதுவெளியியில், வேலை செய்யும் இடத்தில் என மாறிமாறி முறையற்ற காதலை வளர்த்து வந்திருக்கிறார் அஸ்வதி. அஸ்வதியின் இந்த முக்கோண காதல் விவகாரம் ரகுநாதனுக்கு தெரியவர போலீசாரின் உதவியை நாடியிருக்கிறார். மனைவியின் முறையற்ற காதல் விவகாரம் குறித்து கடந்த மாதம் 9ம் தேதி வால்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரகுநாதன் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீசார் அஸ்வதி மற்றும் முரளி, முத்துகுமாரையும் அழைத்து விசாரணை நடத்தியது. 8வயதில் பெண் குழந்தை இருக்க பொறுப்பற்று நடந்துக்கொள்வது குறித்து அஸ்வதிக்கு அறிவுரை வழங்கிய போலீசார் முரளி மற்றும் முத்துக்குமாரையும் கண்டித்து அனுப்பியதாக தெரிகிறது.

போலீசாரின் அறிவுரையை ஏற்று அஸ்வதி தனது முறையற்ற தொடர்புகளையெல்லாம் துண்டித்துக்கொண்டு திருந்தி வாழ்ந்து வந்த நிலையில் வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது அவளை இடைமறித்து தன்னுடனான தொடர்பை நீட்டிக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார் முரளி. இதற்கு அஸ்வதி இணங்க மறுத்த நிலையில் மறைந்து எடுத்து வந்த கத்தியால் அஸ்வதியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளான். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அஸ்வதி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையில் முரளியை போலீசார் கைது செய்தனர். 

Night
Day