எழுத்தின் அளவு: அ+ அ- அ
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏற்றபையனஹள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பட்டியலின மாணவர்கள் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்குள்ளேயே அத்துமீறி நுழைந்து சாதியின் பெயரால் நடத்தப்பட்டிருக்கும் இத்தாக்குதல் சம்பவம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏற்றபையனஹள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இடைவெளியின் போது பள்ளியின் வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் மீது ஆதிக்க சாதியை சேர்ந்த ஆறுமுகம் உள்ளிட்ட சிலர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

பள்ளி அருகே நின்று கொண்டிருந்தவர்களை மாணவர்கள் கேலி செய்ததாக கூறி பள்ளி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த ஆறுமுகம், மாணவர்களை கடுமையாக தாக்கியதில் முகம் வீங்கி, மாணவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டது. மாணவர்கள் என்றும் பாராமல் சாதியின் பெயரை சொல்லியும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இவை அனைத்தும் பள்ளியின் ஆசிரியர்கள் கண் முன்னே நடந்துள்ளது தான் கொடுமையின் உச்சமே. பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆறுமுகம் உள்ளிட்டோரை குறைந்த பட்சம் தடுக்கக்கூட முன்வராத ஆசிரியர்கள், மாறாக மாணவர்களுக்கு பணியாரம் வாங்கி கொடுத்து விவரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என சமாதானப்படுத்தி அனுப்பியதுதான் கொடுமையிலும் கொடுமை.
முகம் முழுவதும் வீங்கி காயங்களோடு வீடு வந்த மாணவர்கள் தாக்குதலுக்கு ஆளான விவரத்தை பெற்றோரிடம் சொல்ல, உறவினர்கள் புடைசூழ பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசில் புகார் அளித்து முறையான நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சமாதானப்படுத்த முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பள்ளியில் ஆதிக்க சாதி மற்றும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக பயின்று வரும் நிலையில் ஆசிரியர்கள் தரப்பில் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாகவும் சாதியின் பெயரில் பல இன்னல்களுக்கு மத்தியில் கல்வி பயில வேண்டிய கட்டாயத்துக்கு பட்டியலின சமூக மாணவர்கள் ஆளாகியிருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
சாதிகள் இல்லையடி பாப்பா என போதிக்க வேண்டிய ஆசிரியர்களே மாணவர்களை வகுப்பறையில் வைத்தே சாதியின் பெயரால் இழுவுப்படுத்தி தங்களது சாதி ஆதிக்க ஆணவத்துக்கு தீணிப்போட்டுக்கொள்வதாகவும் கல்வி கற்பிப்பதில் கூட பாகுபாடு காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி பள்ளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சி, ஆண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பட்டியலின மாணவர்கள் முற்றிலும் ஒதுக்கப்படுவதாகவும் கேள்வி கேட்டால் இந்த பள்ளியே ஆதிக்க சாதியினரின் தானம் என்ற ரீதியில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அரசு பள்ளியில் அரசால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை காட்டிலும் உயர் சாதியினரே பள்ளி நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது இவை அனைத்திற்கும் உச்சமாகவே உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளியில் அத்துமீறி நுழைந்து ஆசிரியர்கள் முன்னிலையிலேயே சாதியின் பெயரால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் நிலையில் அரசு பள்ளியில் கூட பட்டியலின மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைப்பது விளம்பர திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டையே வெளிச்சம்போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது.
அரசு பள்ளிகளில் முறையாக ஆய்வு நடத்தி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய பள்ளிக்கல்வித்துறை செயலற்று கிடப்பதாலேயே, அரசு பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஆதிக்க சாதியின் ஆணவப்போக்கு நீண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை உடனடியாக தலையிட்டு தாக்குதல் நடத்திய நபர் மட்டுமின்றி ஆசிரியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து பட்டியலின மாணவர்களின் கல்வியையும் உரிமையையும் பாதுகாக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.