எழுத்தின் அளவு: அ+ அ- அ
நெல்லை நீதிமன்ற வாசலில் பட்டப்பகலில் இளைஞர் ஓட ஓட விரட்டி, வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர், இன்று காலை வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராக சென்றார். அப்போது நீதிமன்ற வாசலில் நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை ஓடஓட விரட்டியது. அப்போது அவர் தவறி கீழே விழுந்த நிலையில் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியதில் கைகள் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து தப்பியோட முயன்ற 4 பேரில் ஒருவரான ராமகிருஷ்ணன் என்பவரை அங்கு நின்றிருந்த வழக்கறிஞர்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த அனைத்து வழக்கறிஞர்களும் ஒன்று திரண்டு, நீதிமன்றத்திற்கு முன்பாகவே நடைபெற்ற இந்த படுகொலைக்கு போலீசாரே பொறுப்பேற்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 25 காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கும்போதே இந்த படுகொலை நடைபெற்றுள்ளதாகவும், நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கும் எவ்வித பாதுகாப்பும் இல்லை என வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.
தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, தீவிர விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொலை செய்யப்பட்ட நபர் மீது கொலை வழக்கு உள்ளதாகவும், ஆனால் இன்று அவர் வேறொரு வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்திற்கு வந்தபோது இச்சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயாண்டின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், கொலையான மாயாண்டி, கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் படுகொலை சம்பவத்தில், முதல் குற்றவாளியாக வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருவது தெரிந்தது.
இதனிடையே, நெல்லை தாலுகா காவல்நிலையத்தில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவா, மனோராஜ், தங்க மகேஷ் ஆகிய 3 பேரும் சரணடைந்தனர். அவர்களை போலீசார் போலீசார் கைது செய்து தொடர்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீதிமன்றத்திற்கு வந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.