எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாமக்கல் அருகே தீபாவளி பண்டிகைக்கு சீட்டு பிடித்து, சுமார் 40 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், சீட்டு கட்டி ஏமாறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை அடுத்த ஆவத்திபாளையம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவர், கடந்த சில வருடங்களாக தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு உள்ளிட்டவைகளை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பலரும், கடந்த வருடம் மாதேஷிடம் தீபாவளி சீட்டு, பண்டிகை சீட்டு உள்ளிட்டவைகளில் சேர்ந்து, உரிய முறையில் பணம் செலுத்தி வந்ததாக தெரிவிக்கின்றனர்.
வாரம் மற்றும் மாதத் தவணை செலுத்தியதற்காக ஸ்ரீ பரமேஷ்வரா குரூப்ஸ் சீட்டு கம்பெனி என்ற பெயரில் தவணை புத்தகம் அச்சிடப்பட்டு, அதில் கட்டப்பட்ட தவணைத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சீட்டு முடிந்து நான்கு மாதங்கள் கடந்துள்ளநிலையில், சுமார் 40 லட்சம் வரை தவணை கட்டியவர்களுக்கு முதிர்வு தொகையுடன் கூடிய சீட்டு பணத்தை மாதேஷ் திரும்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள், மாதேஷிடம் சீட்டு பணத்தை கேட்டும் முறையான பதில் அளிக்காமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட பெண்கள், பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் மாதேஷ் மீது புகார் அளித்தனர். ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு கூறி அனுப்பி வைத்ததாக பணத்தை பறிகொடுத்த பெண்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தினர்.
மாதேஷ் என்பவரிடம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டு கட்டி வந்ததாகவும், ஆனால், செலுத்திய பணத்தை முறையாக வழங்காமல் அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அன்றாடம் கூலி வேலை செய்து கிடைத்த பணத்தை கொண்டு சீட்டுக் கட்டிதாகவும், இழந்த தங்களது பணத்தை மீட்டு தரும் படியும் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
தீபாவளி சீட்டு என்ற பெயரில், 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது. அதேநேரத்தில் நம்பிக்கையான நிறுவனமா என ஆராய்ந்து பொதுமக்கள் பணத்தை செலுத்தினால், இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாக மாட்டார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.