சென்னை திருமங்கலத்தில் பாஜக பிரமுகரை, திமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருமங்கலத்தில் பாஜக நிர்வாகி ஒருவரை திமுக பிரமுகர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் டிவி நகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பாஜகவில் நெசவாளர் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகே குடிசை மாற்று வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை திமுக பிரமுகர் ஆறுமுகம் என்பவர் அபகரித்து, அவர் பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்திருந்தநிலையில், போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து திமுக பிரமுகர் ஆறுமுகம் 2 மாதமாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மணிகண்டன் தனது வீட்டு வாசலில் விநாயகர் சிலைக்கு பூஜை செய்து கொண்டிருந்த போது கையில் கத்தி, உருட்டு கட்டையுடன் வந்த ஆறுமுகம், மணிகண்டனின் தலையில் வெட்டி கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டார். 

திமுக பிரமுகர் ஆறுமுகத்தின் தாக்குதலில் படுகாயமடைந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திமுக பிரமுகர் ஆறுமுகத்துக்கு ஆதரவாக சிசிடிவி ஆதாரங்களை அழிக்குமாறு மக்களை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே நில அபகரிப்பு தொடர்பாக திமுக பிரமுகர் ஆறுமுகம் மீது பலமுறை புகார் கொடுத்தும் திருமங்கலம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக பிரமுகர் மணிகண்டனின் மனைவி குற்றம்சாட்டி உள்ளார். 

Night
Day