திண்டுக்கல்லில் தாய்க்காக திருட சென்ற மகன்... கிலோ கணக்கில் தப்பிய தங்கம்...

எழுத்தின் அளவு: அ+ அ-

தாய் பெற்ற கடனை அடைக்க, யூடியூபை பார்த்து கொள்ளையில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஒருவரர். கடனை அடைக்க குறுக்கு வழியில் யோசித்த மகனுக்கு நேர்ந்த நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் அமர்நாத். பட்டதாரியான இவர் கொடை ரோட்டில் மொபைல் மற்றும் விளையாட்டு பொருட்களும் விற்பனை செய்யும் கடையும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அமர்நாத்தின் தாயார் சித்ரா, பலரிடம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று இருந்ததாகவும், கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து சித்ரா ஊரை விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.  

சித்ராவிடம் கொடுத்த கடனை திரும்ப கேட்டு கடன் கொடுத்தவர்கள் அமர்நாத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அமர்நாத், தாய் பட்ட கடனை அடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். 

எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், இறுதியாக யூடியூபில் திருடுவது குறித்த காணொளி காட்சிகளை பார்த்துள்ளார். அதன்படி திருடுவதற்குரிய கருவிகளை எடுத்துக்கொண்டு வத்தலகுண்டு மெயின் ரோட்டில் உள்ள மணப்புரம் கோல்டு லோன் அடகு நிறுவனத்தை நோட்டமிட்டுள்ளார். 

தக்க சமயம் பார்த்து, மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்திற்கு கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு சென்ற அமர்நாத் அங்கு பணியில் இருந்த மேலாளர் மணி முருகன், காசாளர் சூர்யா உள்பட 4 பேரிடமும் கத்தியைக் காட்டி மிரட்டி ஒருவருக்கொருவர் பின்புறம் கயிற்றால் கட்டச் சொல்லி மிரட்டியுள்ளார்.

பின்னர் நகைகளை கொள்ளையடிக்க லாக்கரை உடைத்துள்ளார் அமர்நாத். அப்போது பாதுகாப்பு அலாரம் ஒலித்ததால், சுதாரித்து கொண்ட ஊழியர்கள் வெளியே வந்து மணப்புரம் கோல்டு லோன் நிறுவனத்தில் திருடன் புகுந்துள்ளதாக அலறியுள்ளனர்.

இதனை கண்டு அதிர்ந்துபோன அமர்நாத், வெளியே வந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அந்த நேரத்தில் ரம்ஜான் தொழுகைக்காக வந்திருந்த இஸ்லாமியர்கள் சிலர், தப்பியோட முயற்சித்த அமர்நாத்தை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து  வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வத்தலக்குண்டு போலீசார், கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அமர்நாத்தை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அமர்நாத்திடம் மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் மேற்கொண்ட விசாரணையில், தாய் சித்ரா வாங்கிய 20 லட்சம் ரூபாய் கடனை அடைக்க மணப்புரம் வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

லாக்கரின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த அலாரம் தக்க சமயத்தில் ஒலித்ததால், 10 கிலோ தங்க நகைகள் தப்பியது வாடிக்கையாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day