எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஜித்குமார் லாக்கப் மரண வழக்கு தொடர்பாக டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. 4 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தீவிரம் காட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக விரிவாக விசாரித்து அறிக்கை வழங்க மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. அதன் பேரில், கடந்த 2ம் தேதி திருப்புவனம் காவல் நிலையம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து தனது விசாரணையை தொடங்கினார்.
ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் அறநிலையத்துறை அலுவலர் பெரியசாமி, தனிப்படையினர் அஜித்தை தாக்கிய சம்பவத்தை வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்த வழக்கின் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், கோயில் அலுவலர் பிரபு, கோவில் உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக், அஜித்குமாரின் தாயார் மாலதி மற்றும் அஜித்குமாரின் சகோதரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
3வது நாள் விசாரணையில் திருப்புவனம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன், அஜித்குமாரின் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் சதாசிவம் மற்றும் ஏஞ்சல் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் 4வது நாளாக விசாரணையை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், அஜித்குமாரை விசாரணைக்காக திருப்புவனம் காவல்நிலையத்தில் அழைத்து வந்த போது இருந்த காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவகுமார், அஜித்குமார் அமர வைக்கப்பட்ட இடம் ஆகிய பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினார்.
அஜித்குமாரை விசாரணை நடத்திய பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா DVR ஐ அனுமதியின்றி எடுத்து சென்ற சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரனிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமாரிடமும் விசாரணை நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்கள் அடங்கிய பென்டிரைவை நீதிபதியிடம் ஆய்வாளர் ரமேஷ் சமர்ப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து ஏ.டி.எஸ்.பி சுகுமாறன் மற்றும் வழக்கு தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் ஆகியோரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து, 4 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அறிக்கை தயாரிக்கும் பணியில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தீவிரம் காட்டியுள்ளார்.