டியூசன்லாம் ஓல்டு.. இதுதான் புதுசு.. சிக்கிய தலைமை ஆசிரியர்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் க.கணபதி அரசினர் மேல் நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர், 30 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்ததாகக்கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்வது போல் பள்ளி மாணவர்களிடமே மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியர் குறித்த செய்திக்குறிப்பை தற்போது நேரலையில் காணலாம்.

சென்னை கோடம்பாக்கம் ஆர்காடு சாலையில் பதிப்பக செம்மல் க.கணபதி அரசினர் மேல் நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் ஆயிரத்து 500 மாணவர்கள் படித்து வரும் நிலையில், கடந்த வருடம் சக்திவேல் என்ற புதிய தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்துள்ளார். இவர் பள்ளியில் சேர்ந்த நாள்முதலே வசூல் வேட்டை நடத்துவதிலேயே குறியாக இருந்துள்ளார். அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடம் பள்ளியின் வளர்ச்சிக்காக நிதி திரட்டுவதாகக்கூறி, ஒவ்வொருவரிடமும் 500 ரூபாய் வரை பணம் வாங்கி சுமார் 6 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ளார்.

மேலும் முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் புரவலர் வைப்பு நிதியாக வைத்திருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் கையாடல் செய்து, தனது மனைவியின் ஆக்சிஸ் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார் சக்திவேல். அதோடு பள்ளியின் முத்திரை பதித்த பேட்ஜ் வழங்குவதாக கூறி, ஒவ்வொரு மாணவரிடமும் 10 ரூபாய் வீதம் வசூல் வேட்டை நடத்தி அட்டூழியம் செய்துள்ளார்.

பின்னர் மாணவர்களுக்கு டீ சர்ட் வழங்குவதாக தொண்டு நிறுவனத்திடம் 50 ஆயிரம் ரூபாயை வாங்கிய சக்திவேல், அதனை மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும் ஆசிரியர் கழக நிதியிலிருந்து டீ சர்ட் வாங்கியதாக கணக்கும் காட்டி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். 

தனது வசூல் வேட்டையை இத்தோடு நிறுத்தாத சக்திவேல், 10 மற்றும் 12ம் வகுப்பில் சிறு தவறு செய்யும் மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்கி பள்ளியை விட்டு நீக்கி உள்ளார். 

இதனால் கொதித்தெழுத்த மற்ற ஆசிரியர்கள், அரசு பள்ளியின் பெயரை கெடுப்பதாக கூறி தலைமை ஆசிரியர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி கல்வி இயக்குனருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த கடிதத்தை பெற்று கொண்ட பள்ளி கல்வித்துறையோ வழக்கம் போல் ஆசிரியர்கள் அனுப்பிய கடிதத்தின் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் மெத்தனமாக 50 நாட்களுக்கு மேல் இருந்துள்ளனர். 

அதன் பிறகு அதிகாரிகள் அனுப்பிய கணக்கு தணிக்கை குழு, அரசு பள்ளியின் வங்கி கணக்குகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் தலைமை ஆசிரியராக இருந்த சக்திவேல் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை பள்ளி மாணவர்களுக்கு செலவு செய்ய வேண்டிய பணத்தை முறைகேடு செய்தது தெரியவந்தது. 

புகாரில் சிக்கிக்கொள்வோம் என பயந்துபோன சக்திவேல், பன்னிரண்டாம் வகுப்பு தேர்விற்கு முன்பே 20 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டதாக கூறபடுகிறது. பள்ளியின் மற்ற ஆசிரியர்கள் அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என உறுதியாக இருந்ததால் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அவரை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும் சென்னை மாவட்டத்தைவிட்டு வெளியேற கூடாது என்றும் உத்தரவு பிறபித்துள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வைக்கப்பட்ட நிதியை முறைகேடு செய்து தனது குடும்பத்துக்காக சொத்து சேர்த்த தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

varient
Night
Day