சட்ட விரோத மணல் கொள்ளை... தட்டி கேட்டவருக்கு அடி, உதை...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணலை சட்ட விரோதமாக எடுத்து விற்பனை செய்தது குறித்து தட்டிக்கேட்ட இளைஞரை அடித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் மனு அளித்த நிலையில், அது குறித்து பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்ட பணிகளுக்காக வாய்க்கால் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு வாய்க்கால் தோண்டும் போது கிடைக்கும் மணல் அந்த பகுதியில் குவித்து வைக்கப்படுகிறது. இந்த மணலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் அனுமதியின்றி எடுத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அப்பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் தட்டி கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார், தமிழரசனை அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசன், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக தெரிகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், ஏற்கனவே இதே போல் கனிம வளக்கொள்ளையை தட்டி கேட்ட சமூக ஆர்வலர் ஜகபர் அலி, குவாரி உரிமையாளர்களால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நடந்துள்ளதாக குறிப்பிட்டும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழரசன் மனு அளித்துள்ளார்.

பின்னர் பேசிய அவர், தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவில்லை என்றால், குன்னத்தூர் பகுதியில் பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இனியாவது, விளம்பர திமுக அரசு விழித்துக் கொண்டு மணல் கொள்ளை குறித்து தகவல் கொடுப்போருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day