கரூர் பெருந்துயரம் தொடர்பான விசாரணையை தொடங்குவது குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்திய நிலையில், கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவின் தற்காலிக அலுவலக வளாகத்தில் வழக்கு தொடர்பான ஆவண நகல்கள் உள்ளிட்டவை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை விதிக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை கடந்த 13ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை நடத்துவதற்காக ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார் தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.
சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. முகேஷ்குமார், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ளனர். கரூர் சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகளிடம், கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக இதுவரை நடந்த விசாரணை விவரங்களையும், ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து விசாரணையை தொடங்குவது குறித்து சிபிஐ அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
சிபிஐ அதிகாரிகள் நாளை விசாரணையை துவங்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்கட்ட விசாரணை சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் பொதுப்பணித்துறை கட்டடத்தில் செயல்பட்டு வந்த சிறப்பு புலனாய்வு குழு தற்காலிக அலுவலகத்தை காலி செய்த நிலையில், தற்காலிக அலுவலக வளாகத்தில் வழக்கு தொடர்பான மீதமிருந்த ஆவண நகல்கள் உள்ளிட்டவை தீயிட்டு எரிட்ககப்பட்டுள்ளது. எரிந்த காகித துண்டுகளுடன் 32 ஜிபி பென் ட்ரைவ் ஒன்றும் கிடந்தது. மேலும் எரிக்கப்பட்ட காகிதங்களில் கரூர், சம்பவம், புஸ், CTR போன்ற வாக்கியங்கள் இடம் பெற்றிருந்தன.