மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், அவர் மீது புகாரளித்த நிகிதா, மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோவிலில் காவலாளியாக வேலை பார்த்த அஜித்குமார் மீது நகை திருடுபோனதாக நிகிதா என்பவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதனடிப்படையில் விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட அஜித்குமார் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். இந்த காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 11வது நாளாக விசாரித்து வருகிறது. விசாரணையின் போது, திருப்புவனம் காவல்நிலையம், மடப்புரம் கோவில் பின்புறம் கோசாலை பகுதி, காவலர்கள் அஜித்குமாரை கட்டி வைத்து அடித்த இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் உள்பட 5 பேரிடமும், கோவில் பணியாளர்களிடம் 2 முறை தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அஜித்குமார் மீது திருட்டு புகார் அளித்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி ஆகியோர் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி நிகிதா மற்றும் அவரது தயார் சிவகாமி ஆகியோர் மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் 3 மணி நேரமாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.