2025ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு உலோக கரிம கட்டமைப்புகளை உருவாக்கியதற்காக 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் சிறந்த சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் நேற்று முன்தினம் முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் இயற்பியலைத் தொடர்ந்து வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.
ஜப்பானின் கியோட்டோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த சுசுமு கிடகாவா, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னினயா பல்கலை கழகத்தை சேர்ந்த ஒமர் எம். யாகி ஆகியோருக்கு உலோக கரிம கட்டமைப்புகளை உருவாக்கியதற்காக நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இவர்கள் உருவாக்கியுள்ள, வாயுக்கள் மற்றும் பிற ரசாயனங்கள் பாயக்கூடிய பெரிய இடைவெளிகளைக் கொண்ட உலோக-கரிம மூலக்கூறு கட்டமைப்பை, பாலைவனக் காற்றிலிருந்து தண்ணீரை உற்பத்தி செய்யவும், கார்பன் டை ஆக்சைடைப் பிடிக்கவும், நச்சு வாயுக்களை சேமிக்க அல்லது வேதியியல் எதிர்வினைகளுக்காகவும் பயன்படுத்த முடியும்.