நேபாளில் மீண்டும் வன்முறை... கல்வீச்சு... துப்பாக்கிச்சூடு

எழுத்தின் அளவு: அ+ அ-

நேபாளத்தில் இரண்டாவது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் மீண்டும் வன்முறை வெடித்தது.

நேபாளத்தில் அரசு விதிகளின் படி பதிவு செய்யப்படாத காரணத்தால் பேஸ்புக், டிவிட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. நேபாள அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஜென் இசட் இளைஞர் அமைப்பினர் நேற்று தலைநகர் காத்மண்டுவில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.   நாடாளுமன்றக் கட்டிடம் உள்ளிட்ட முக்கிய அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியதால் போராட்டம் வன்முறையாக மாறியது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் வன்முறை வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் சமூக ஊடகங்கள் மீதான தடையை நள்ளிரவு முதல் நேபாள அரசு விலக்கிக் கொண்டது. ஆனாலும் சமூக ஊடகங்கள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையிலும் இரண்டாவது நாளாக இளைஞர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். 

இந்த நிலையில் நேபாளத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி 2வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்து. ஆளும் அரசின் ஊழலையும் கண்டித்து தலைநகர் காத்மண்டுவில் டயர்களை எரித்து, வன்முறையில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் நீடிக்கிறது. மீண்டும் வெடித்த போராட்டத்தால் காத்மண்டு கலவர பூமியாக மாறியதால் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ராணுவத்தினர் மீது கல் வீச் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதில் பலரும் படுகாயம் அடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

ஜென் இசட் தலைமுறை இளைஞர்களின் வன்முறைப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய தலைவர்களின் வீடுகள் அலுவலகங்களுக்கு  தீ வைக்கப்பட்டன. நேபாள அரசின் மக்கள்  தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் வீட்டில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதேபோல் லலித்பூரில் உள்ள நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா வீட்டிலும் தீ வைத்தனர். இதேபோல் நேபாள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இதனிடையே காத்மண்டு பகுதியில் கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். அப்போது பெண் ஒருவர் கடையின் பின்னால் தஞ்சமடையுடம் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. 

நேபாளத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் 2- ஆவது நாளாக நீடிக்கும் நிலையில் இன்று மேலும் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். நேற்று நேபாள உள்துறை அமைச்சர் போராட்ட அடக்கு முறையில் 20 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினா செய்தார். இந்நிலையில் இன்று வேளாண்மைத் துறை அமைச்சர் ராம்நாத் அதிகாரி, சுகாதாரத் துறை அமைச்சர்  பிரதீப் பௌடெல் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் கட்டுப்பாட்டை மீறியதால் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலைமை குறித்தும் அர்த்தமுள்ள தீர்வு காணவும்  சம்மந்தப்பட்ட அமைப்புகளுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக  அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கே.பி.ஷர்மா ஒலி, இந்த கடினமான சூழலில் சகோதர சகோதரிகள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


Night
Day