எழுத்தின் அளவு: அ+ அ- அ
நேபாளத்தில் சமூக வலைதளத்தை தடை செய்ததற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதள செயலிகளை அந்நாட்டு அரசு தடை செய்தது. பதிவு செய்ய வேண்டிய விதிமுறைகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் பின்பற்றாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நேபாள அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் ஜென் இசட் (Gen Z) என பெயரிட்டுக் கொள்ளும் 1997-2012 வரை பிறந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நேபாள அரசின் முடிவுக்கு எதிராக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேபாள பாதுகாப்பு படையினரின் பல கட்ட தடுப்புகளையும் மீறி தலைநகர் காத்மண்டுவில் உள்ள நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இளைஞர்கள் நாடாளுமன்றத்தை சிறைபிடிக்க முயற்சித்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தீயிட்டனர்.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த வன்முறைப் போராட்டத்தில் 14 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தொடர்ந்து ஏராளமான பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று கூடி வருவதால் நிலைமையும் மோசம் அடைகிறது. இதனால் நேபாள நாட்டின் முக்கியமான நகரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது. மேலும், போராட்டம் மற்றும் வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக நேபாளத்தில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் நேபாள பிரதமர் கே.பி.ஒலி அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 6 மணிக்கு பாலுவாதரில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என நேபாள அரசு அறிவித்துள்ளது. இதில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது மற்றும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக நேபாள நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் வன்முறை தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டக்காரர்களை கண்டதும் சுடுமாறு பாதுகாப்புப் படையினருக்கு நேபாள அரசு உத்தரவிட்டுள்ளது. வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து பொருட்களை உடைத்து தீயிட்டு எரித்ததால் கண்டதும் சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெற்று வரும் நேபாளத்தில் குடியரசுத் தலைவர் ராம் சந்தர பௌடெல் மற்றும் பிரதமர் கே.பி.ஒலி ஆகியோரின் வீடுகள் முன்பு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாக நேபாள பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் வீடுகளுக்கு ராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் ஜென் இசட் தலைமுறையினரின் போராட்டம் மற்றும் வன்முறையைக் கட்டுப்படுத்த ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளதாக நேபாள் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முற்றிலும் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேபாள போராட்டத்தில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது நடைபெற்ற வன்முறை நிகழ்வுகளை பதிவு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர் திபேந்திர துங்கானா என்பவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்து ரத்தம் கொட்டிய பத்திரிகையாளரை சக பத்திரிகையாளர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நேபாள நாட்டில் நிலவும் அசாதாரண சூழலுக்கு இடையே அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது. அரசுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் கே.பி ஒலி தலைமையிலான பாதுகாப்புக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள பாதுகாப்புதுறை அமைச்சர் மன்வீர் ராய், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக், வெளியுறவு அமைச்சர் அர்ஜு ராணா மற்றும் நேபாள ராணுவத் தளபதி பிரபுராம் சர்மா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தீவிரமடைந்த வரும் வன்முறையைக் கட்டுப்படுத்துவது மற்றும் முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.
போராட்டம் மற்றும் வன்முறை எதிரொலியாக நேபாளத்தில் மீண்டும் ஃபேஸ்புக் சமூக வலைதளம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நேபாள அரசாங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றாத பேஸ்புக், வாட்ஸ்அப், டிவிட்டர் போன்ற சமூக வலைதள பயன்பாட்டுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்ததால் இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பேஸ்புக் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதாக Nepal Press செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் நேபாள அரசின் அமைச்சரவை கூட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு திரும்ப பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.