தேஜஸ் விமான விபத்தில் விமானி உயிரிழப்பு- IAF

எழுத்தின் அளவு: அ+ அ-

துபாய் விமான கண்காட்சியில் வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமான கண்காட்சி, நடப்பாண்டு துபாயில் கடந்த 17ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் உலக நாடுகளில் இருந்து விமானங்கள் மற்றும் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் என சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்த கண்காட்சியில் இந்திய விமானப் படையின் விமானங்கள் சாகசத்தில் ஈடுபடுவதோடு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தேஜஸ் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தினசரி விமான கண்காட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று மதியம் 2.10 மணியளவில் சாகசத்தில் ஈடுபட்டிருந்த இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் போர் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. செங்குத்தாக சாகசத்தில் ஈடுபட்டிருந்த தேஜஸ் போர் விமானம் திடீரென தரையை நோக்கி கீழே விழத் தொடங்கியது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் வானில் இருந்து கீழே விழுந்த விமானம் தரையில் மோதி பெரும் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது.

தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விமானியின் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள இந்திய விமானப் படை, இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்த விமானியின் குடும்பத்தினருடன் உறுதியாக நிற்பதாக தெரிவித்துள்ளது. மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. 

முன்னதாக, துபாயில் உள்ள விமான கண்காட்சியில் நிறுத்தப்பட்டிருந்த தேஜஸ் போர் விமானத்தில் எண்ணெய் கசிவுகள் ஏற்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் நேற்று முன்தினம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இது ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அமைப்பு ஆகியவற்றில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் வழக்கமான நடைமுறை என மத்திய அரசு விளக்கம் அளித்து இருந்தது. இந்நிலையில் விமான சாகசத்தின் போது தேஜஸ் போர் விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இலகுரக போர் விமானமான தேஜஸ், கடந்த 2015ம் ஆண்டு முதல் இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


Night
Day