எழுத்தின் அளவு: அ+ அ- அ
வெளிநாட்டு பணியாளர்கள் H-1B விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுதோறும் ஒரு லட்சம் டாலர் கட்டணம் வசூலிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
H-1B விசா என்பது அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரியும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் விசா ஆகும். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட H-1B விசா பெறுநர்களில் 71% பேர் இந்தியாவிலும், 11.7% பேர் சீனாவிலும் உள்ளனர். இந்நிலையில், H-1B விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் ஆண்டுக் கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக, இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலிக்கும் உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இது குறித்து விளக்கிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், மிக தவறாகப் பயன்படுத்தப்படும் விசா முறைகளில் ஒன்று H1-B குடியேற்றமற்ற விசா திட்டம் என்று கூறினார். H-1B விண்ணப்பதாரர்களுக்கு நிறுவனங்கள் செலுத்தும் கட்டணம் ஒரு லட்சம் டாலராக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், இது தொழில் நிறுவனங்கள் அழைத்துவரும் பணியாளர்கள் உண்மையில் மிகவும் திறமையானவர்கள் என்பதையும், அவர்கள் அமெரிக்க தொழிலாளர்களால் மாற்றப்பட முடியாதவர்கள் என்பதையும் உறுதி செய்யும் என்றும் கூறினார்.
அமெரிக்காவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களில் உள்நாட்டு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும், வெளியில் இருந்து ஊழியர்களை வரவழைப்பதை நிறுத்த வேண்டும் என்பதுதான் தங்களுடைய கொள்கை என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை தொழில்நுட்பத் துறை எதிர்க்காது என்று கூறிய டிரம்ப், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் தனிநபர்களுக்கு ஒரு மில்லியன் டாலரும், தொழில் நிறுவனங்களுக்கு 2 மில்லியன் டாலரும் கட்டணமாக நிர்ணயிக்கும் விலையுயர்ந்த GOLDEN CARD விசா திட்டத்திற்கான நிர்வாக உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார். இதன் மூலம் அமெரிக்காவுக்கு பில்லியன் கணக்கில் வருவாய் கிடைக்கும் என்று வர்த்தகத்துறை செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டண உயர்வின்படி, கடந்த காலங்களில் ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாயாக இருந்த H-1B விசா கட்டணம் பல மடங்கு உயர்ந்து 88 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 முதல் 2023 ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்கா வழங்கிய மொத்த H-1B விசாவில் 71 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டண உயர்வால் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அதிகம் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. வரும் காலங்களில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்தி வெளிநாட்டு பணியாளர்களை ஐடி நிறுவனங்கள் பணியமர்த்துவது குறையும் என்பதால், இது இந்தியாவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.