எழுத்தின் அளவு: அ+ அ- அ
போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்ததை முதலில் மறுத்த ஈரான், தற்போது இஸ்ரேலுடன் போரை நிறுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக போரில் இறங்கிய அமெரிக்கா, அந்நாட்டின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்த ஈரான், கத்தார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க டிரம்ப் அறிவித்தார். அடுத்த 24 மணிநேரத்தில், முற்றிலும் போரானது நிறுத்தப்படும் என்றும் அவர் கூறினார். ஆனால் இதை ஈரான் மறுத்த நிலையில், போர் நிறுத்தம் பற்றியோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி கூறினார்.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் மீது ஈரான் இன்று காலை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 5 முறை நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பீர்ஷேவா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உருக்குலைந்தது. இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் முக்கிய திருப்பமாக, இஸ்ரேலுடனான போரை நிறுத்துவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 12 நாட்களாக நடைபெற்ற போர் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணி முதல் நிறுத்தப்படுவதாக ஈரான் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. நாட்டை தங்கள் கடைசி சொட்டு இரத்தம் வரை பாதுகாக்கத் தயாராக இருந்த மற்றும் எதிரியின் தாக்குதலுக்கு கடைசி நிமிடம் வரை பதிலளித்த துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு நன்றி என்று ஈரான் வெளியுறவுத்தறை அமைச்சர் அராக்சி எக்ஸ்வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அதை மீற வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.