எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தலைமையிலான குழுவுடன் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் ஏவப்பட்டது.
அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு செல்ல தேர்வானார். அவருடன் போலந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி, விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு உள்ளிட்ட 3 பேர் விண்வெளிக்கு பயணம் செய்துள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் அவர்கள் செல்ல இருந்த பயணம், தொழில்நுட்ப கோளாறு, மோசமான வானிலை ஆகியவை காரணமாக 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக 19ம் தேதி ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆக்சியம் 4 திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என நாசா அறிவித்திருந்தது. அதன்படி இந்திய நேரப்படி இன்று நண்பகல் 12.01 மணிக்கு புளோரிடாவில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இதனிடையே ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டிலிருந்து பிரிந்த டிராகன் விண்கலம் தனியாக பயணம் செய்து வருகிறது. விண்ணில் ஏவப்பட்டு 8 நிமிடத்தில் விண்கலத்தை அனுப்பிவிட்டு பூஸ்டர் தரையிறங்கியது. இந்த நிலையில் டிராகன் விண்கலம் இந்திய நேரப்படி நாளை மாலை சர்வதேச விண்வெளி மையத்திற்கு, சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி மையத்தில் மொத்தம் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்கள், சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
முன்னதாக விண்வெளி பயணத்திற்கு புறப்படும் போது "ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்.." என்று முழங்கி/ சுபான்ஷு சுக்லா, தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார். 41 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் மீண்டும் விண்வெளியை அடைந்துள்ளதாகவும், ஒரு சிறந்த பயணம், தனது தோளில் மூவர்ணக் கொடி உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இதனிடையே இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு சென்றதை நெகிழ்ச்சியுடன் அவரது குடும்பத்தினர் கண்டு ரசித்தனர். இதைவிட மகிழ்ச்சிகரமான தருணம் தனது வாழ்க்கையில் வேறு ஏதுமில்லை என சுக்லாவின் தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார்.