மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு - அனைவரும் விடுதலை

எழுத்தின் அளவு: அ+ அ-

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆதாரங்களை நிரூபிக்க என்.ஐ.ஏ தவறியதாக கூறி குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரையும் மும்பை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் என்ற இடத்தில், 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக பாஜக முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், சமீர் குல்கர்னி, ராஜா ரஹீர்கர், சுவாமி அம்ரூதானந்த், சுதாகர் சதூர்வேதி உள்ளிட்ட ஏழு பேர் மீது, சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செய்யப்பட்டு மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவு நடத்திவந்த இந்த விசாரணை, 2011ல் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது

17 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த வழக்கில் ஜாமினில் உள்ள 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து நீதிபதி ஏ.கே. லஹோட்டி உத்தரவிட்டார்.  

வெறும் சந்தேகத்தால் வழக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியாது என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது என்றும் நீதிபதி ஏ.கே. லஹோட்டி தெரிவித்தார். சமூகத்திற்கு எதிரான ஒரு பெரிய சம்பவம் நடந்துள்ளது, ஆனால் நீதிமன்றம் தார்மீக அடிப்படையில் மட்டுமே குற்றவாளி என்று தீர்ப்பளிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதி, கர்னல் புரோஹித் வெடிகுண்டு தயாரித்ததற்கும், மாலேகான் குண்டுவெடிப்பில் பிரக்யா தாக்கூர் பைக் பயன்படுத்தப்பட்டதற்கும் ஆதாரம் இல்லை என்றும் தமது தீர்ப்பில் தெரிவித்தார். 

Night
Day