எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு, தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் நாளை தொடங்கி ஆகஸ்டு 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் 8 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டு உள்ள நிலையில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக இடையில் ஆகஸ்டு 12 முதல் 18-ந்தேதி வரை நாடாளுமன்ற தொடருக்கு இடைவெளி விடப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் மற்றும் விவகாரங்கள் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகள் நேற்று ஆலோசனை நடத்தின. 24 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் கூட்டத்தொடரை என்ன எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, போர் நிறுத்தத்திற்கு உரிமைகோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பு ஆகியவை பற்றி கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவதற்காக நாடாளுமண்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜெ.பி.நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால், எல். முருகன் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிக்களின் எம்பிக்களும் கலந்து கொண்டனர்.