மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல் பாஜக கூட்டணி அமோக வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு  2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. முதல் கட்டமாக 264 கவுன்சில்களில் கடந்த 2-ம் தேதியும், மற்ற கவுன்சில்களில் கடந்த 20-ம்தேதியும் தேர்தல் நடந்தது. மாநிலம் முழுவதும் 286 நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்காக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி, 286 நகராட்சி கவுன்சில்களில் 207 இடங்களில் வெற்றி பெற்றது. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி முடிவுகளின்படி, 117 நகராட்சித் தலைவர் பதவிகளுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 53 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 37 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.  

இந்த தேர்தலில்  எதிர்க்கட்சிகளின்  மகா விகாஸ் அகாடி கூட்டணி வெறும் 44 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் 28 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 7 இடங்களிலும்,  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

6 ஆயிரத்து 859 கவுன்சிலர் பதவிக்கான இடங்களில் 3 ஆயிரத்து 300 இடங்களில் பாஜக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஷிண்டேவின் சிவசேனா  600 இடங்களையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 200 இடங்களையும் வென்றுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 145 இடங்களிலும், காங்கிரஸ் 105 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 122 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

Night
Day