எழுத்தின் அளவு: அ+ அ- அ
பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள், ஏழைகளின் வாக்குகளை திருடுவதற்கு தேர்தல் ஆணையம் சதி செய்து வருவதாக விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பி வருவதாக கூறினார். கடந்த முறை திருத்தப் பணிகளுக்கு ஒரு ஆண்டு எடுத்துக் கொண்ட போது, தற்போது 25 முதல் 30 நாட்களுக்குள் எப்படி முழுமையாக பணிகளை முடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். மழைக்காலமான தற்போதைய சூழலில் எப்படி திருத்தப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பிய பவன் கெரா, இத்தகைய காரணங்களாலேயே உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவித்தார். ஏழைகளின் வாக்குகளை திருடுவதற்கு தேர்தல் ஆணையம் சதி செய்து வருவதாக தெரிவித்தார்.
இதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பீகாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 15 முதல் 20 சதவீத மக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளார்கள் என்று தெரிவித்தார். வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ள அனைவரும் இந்திய குடியுரிமையை இழப்பார்கள் என்றும் கூறினார். வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்பி மனோஜ் ஜா, இப்பணிகளை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்தார். எதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இப்பணிகளை மேற்கொண்டு வருவதாக கேள்வி எழுப்பிய அவர், இதுவும் கூட நாளை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தின் ஒரு குறிக்கோள் என்று கூறினார்.