பாஜக எம்.பி மீது கொடூர தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்குவங்க மாநிலத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு மேற்கொள்ள சென்ற பாஜக எம்.பி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவந்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாக்ரகாட்டா என்ற பகுதியில் பாஜக எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழுவினர் சேதங்களை ஆய்வு செய்ய சென்றுள்ளனர். 

அப்போது, பாஜக குழுவினர் சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், வடக்கு மால்டாவை சேர்ந்த பாஜக எம்.பியான காகென் முர்மு மற்றும் சிலிகுரி எம்.எல்.ஏவான சங்கர் கோஷ் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். குறிப்பாக பாஜக எம்.பியான காகென் முர்மு ரத்த வெள்ளத்தில், காரில் அமர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ், குண்டர்களை ஏவி பாஜக எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக பாஜக சார்பில் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சென்ற பாஜக தலைவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் மேற்கு வங்கத்தில் காட்டு ராஜ்ஜியம் நடப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், பாஜக எம்.பி காகென் முர்மு மீதான தாக்குதல் குறித்து பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 30 - 40 வாகனங்களில் சென்றால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு மோசமடைவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடைகள் மற்றும் தங்குமிடம் தான் தற்போதைய தேவை எனவும் கூறியுள்ளார். இனி எந்த சம்பவங்களும் நடக்க கூடாது என தாம் விரும்புவதாகவும், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தயவு செய்து அமைதியாக இருக்க வேண்டும் எனவும் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

Night
Day