எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிர்வினையாக இந்திய எல்லையோர மாநிலங்களில் இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்கபதிலடி கொடுத்தது. ஜம்மு காஷ்மீரை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய எட்டு ஏவுகணைகள் மற்றும் 2 டிரோன்களை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக வழிமறித்து தாக்கி அழித்தது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாக எல்லையோர மாநிலங்களில் நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியது. ஜம்மு & காஷ்மீரின் உதம்பூர், ஜம்மு, அக்னூர், பூஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியா செக்டார்களில் பாகிஸ்தான் ஏவிய 8 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வழிமறித்து தாக்கி அழித்தது.
ஜம்மு காஷ்மீரின் நௌஷேராவில் பாகிஸ்தான் செலுத்திய இரண்டு டிரோன்களை இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. மேலும் உரி பகுதியிலும் பாகிஸ்தான் டிரோன்களை இந்திய வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்தது.
காஷ்மீரைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பஞ்சாப் மாநிலத்தின் எல்லையை ஒட்டிய ஜலந்தர், அமிர்தசரஸ், பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது, பாகிஸ்தான் டிரோன்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதேபோல் குஜராத் மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.