நீட் தேர்வு குளறுபடி சர்ச்சையும்.. விளக்கமும்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வில் குளறுபடிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேர்வு நேர்மையாக நடைபெற்றதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு சர்ச்சை குறித்தும் அதற்கு தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கம் குறித்தும் விரிவாக காணலாம்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் உள்ள 557 நகரங்கள் மற்றும் இந்தியாவிற்கு வெளியே உள்ள 14 நகரங்களில் கடந்த மாதம் நடைபெற்றது. 24 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வினை எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பீகார், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் ஆள்மாறாட்டம் செய்ததாக பலர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பீகாரில் கடந்த மே 5 ஆம் தேதி தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள்களை கசியவிட தரகர்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக  தெரிவிக்கப்பட்டது. 

விசாரணையில், இடைத்தரகர்கள் நீட் வினாத்தாளை கசிய விட 30 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூலித்தது தெரியவந்ததாக செய்திகள் வெளியாகின. தேர்வுக்கு முந்தைய நாள் சுமார் 35 பேருக்கு தரகர்கள் வினாத்தாள்களை வழங்கியதாக கூறப்பட்ட நிலையில் 13 பேரை பாட்னா காவல்துறை கைது செய்ததாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை கடந்த மாதம் 17 ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

எனினும் இந்த பொதுநல மனுவில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  கோடை விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், ஆனால் அகில இந்தியத் தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க முடியாது எனவும்,  தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூலை எட்டாம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. 

இதற்கிடையே நீட் தேர்வு முடிவுகள் கடந்த நான்காம் தேதி வெளியான நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, எதிர்பாராத விதமாக அதிக கட்-ஆஃப் மதிப்பெண்கள், ஈடுசெய்யும் மதிப்பெண்கள் மற்றும்  720க்கு 720 என முழு மதிப்பெண்களை பெற்ற தேர்வர்களின் எண்ணிக்கை குறித்து சர்ச்சைகள் எழுந்தன. 

ஒரு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் 6 பேர் 720 மதிப்பெண்களும், இரண்டு பேர் முறையே 718 மற்றும் 719 மதிப்பெண்களும் எடுத்தனர். மேலும், வரும் 14ஆம் தேதிக்கு பதிலாக முன்கூட்டி கடந்த நான்காம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது. அதில், ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் தயாராகிவிட்டதால், அறிவிப்பை மேலும் தாமதப்படுத்த எந்த காரணமும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 67 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்தது குறித்த சர்ச்சைக்கு, இயற்பியலில் ஒரு விடை திருத்தியமைக்கப்பட்டதே 44 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேர்வினை முடிக்க முழுமையாக 3 மணி நேரம் 20 நிமிடங்கள் கிடைக்கவில்லை என்றும் சில தேவர்கள் குற்றம் சாட்டியதாகவும், இதையடுத்து தேர்வு மற்றும் கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட குழு மூலம், ஆராய்ந்து தேர்வு நேர இழப்பு கண்டறியப்பட்டதாகவும், அதன்படி, தேர்வர்களுக்கு அவர்களின் பதில் திறன் மற்றும் இழந்த நேரத்தின் அடிப்படையில் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு ஈடுசெய்யப்பட்டதாகவும், தேசிய தேர்வு முகமையின் தலைமை இயக்குனர் சுபோத் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மறுதேர்வு மற்றும் மதிப்பெண் இழப்பீடு கோரிய ஆயிரத்து 600 மாணவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ள சுபோத் குமார் சிங், நீட் தேர்வு நேர்மையுடன் நடத்தப்பட்டுள்ளது எனவும் நீட் வினாத்தாள் கசியவில்லை எனவும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

நேரப் பற்றாக்குறை தொடர்பான பிரசனைகளால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகவும், அதன் காரணமாகவே 718 மற்றும் 719 மதிப்பெண்ககளை தேர்வர்கள் எடுத்தனர் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ள நிலையில், தேர்வு எழுதிய 24 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்களில் எத்தனை பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

varient
Night
Day