நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்கள் ஒருவரை, ஒருவர்  ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக்‍ கொண்டனர். 

இஸ்லாமியர்கள் புனித பண்டிகையாக ரமலானை கொண்டாடி வருவதால், கடந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து இன்று ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர் நாட்காட்டியில் ஷவ்வால் மாதம் இன்று தொடங்குவதையே ஒட்டி ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். இதை ஒட்டி ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஜூம்மா மசூதியில் திரண்ட ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்‍கொருவர் ரமலான் வாழ்த்துக்‍களை தெரிவித்துக்‍கொண்டனர். அப்போது மதநல்லணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் பங்கேற்க வந்த இஸ்லாமியர்கள் மீது இந்து மக்கள் மலர்கள்  தூவி வரவேற்பு அளித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.  ஈகை திருநாளான இன்று ஸ்ரீநகரில் உள்ள சோன்வார் பகுதியில் ஆண்கள் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரும், ராணுவத்தினரும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்‍கைகளை பலப்படுத்தி இருந்தனர்.

கேரளாவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடி வரும் இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்தினர். ​திருவனந்தபுரத்தில் உள்ள மசூதியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் தங்களது மனைவி, குழந்தைகளுடன் வந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ரம்ஜான் வாழ்த்துக்‍களை நண்பர்கள், உறவினர்களுடன்  பரிமாறிக்‍கொண்டனர்.

இதே போன்று தெற்கு மும்பையில் உள்ள மிகப்பழமையான பெரிய மசூதிகளில் ஒன்றான ஜும்மா மசூதியில் ஆயிரக்‍கணக்‍கான இஸ்லாமியர்கள் திரண்டு வந்து ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் ஒருவருக்‍கொருவர் வாழ்த்துக்‍களை பரிமாறிக்‍கொண்டனர்.





Night
Day