எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணி செல்ல முயன்ற எதிர்க்கட்சி எம்பிக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமை தேர்தல் ஆணையம் நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டனர். எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு, உத்தவ் தாக்கரே தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க் கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பேரணியில் கலந்து கொண்டனர். அவர்கள், வாக்கு திருட்டு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். எதிர்க் கட்சி எம்.பி.க்களின் பேரணியை முன்னிட்டு டெல்லி போலீசார், துணை ராணுவப் படையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பிரியங்கா காந்தி, சரத் பவார், மல்லிகார்ஜூன கார்கே, அகிலேஷ் யாதவ், சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் பேரணியில் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில், பேரணியாக சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்களை துணை ராணுவப் படையினரும், டெல்லி போலீசாரும் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரியங்கா காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைகளை தட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
பேரணிக்கு அனுமதி மறுத்து போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து, எம்பிக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது பெண் எம்பிக்கள் சிலர் மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர், தடுப்புகளின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அனுமதியின்றி பேரணியாக செல்ல முயன்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத் உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது பேட்டியளித்த ராகுல் காந்தி, இந்தப் போராட்டம் அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது என்றும் இந்தப் போராட்டம் ஒரு மனிதன், ஒரு வாக்குக்கானது என்றும் கூறினார். தங்களுக்கு தெளிவான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதனிடையே, எதிர்க்கட்சிகள் பேரணி மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற போலீசார் கைது நடவடிக்கையின் போது திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பெண் எம்.பி., மிதாலி பாக் மயக்கமடைந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்டோர் பெண் எம்.பி.,க்கு தேவையான உதவிகளை செய்து காரில் அனுப்பி வைத்தனர்.