எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் நடைபெற்ற 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழில் சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை பார்க்கிங் திரைப்படம் வென்றுள்ளது.
திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு 1954ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லி விக்ஞான் பவனில் கோலாகலமாக நடைபெற்றது. தேசிய விருதுக்கு தேர்வான திரைக் கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அந்த வகையில்,
சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளை பார்க்கிங் படம் வென்றது. சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பார்க்கிங் தயாரிப்பாளர் சினிசுக்கும், சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதை திரைக்கதை ஆசிரியரும், இயக்குநருமான ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கும், சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை எம்.எஸ். பாஸ்கருக்கும் குடியரத்துத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கி கௌரவித்தார்.
இதேபோன்று வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான வாத்தி திரைப்படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் வென்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார்.
மலையாள திரைப்படமான 'உள்ளொழுக்கு' படத்துக்காக நடிகை ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது 'ஜவான்' படத்துக்காக ஷாருக்கானுக்கும் '12th Fail' படத்துக்காக நடிகர் விக்ராந்த் மாஸ்ஸிக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. சாட்டர்ஜி vs நார்வே இந்திப் படத்தில் நடித்த ராணி முகர்ஜிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
இந்திய திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி மலையாள நடிகர் மோகன் லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கௌரவித்தார். அப்போது அனைவரும் எழுந்து நின்று நடிகர் மோகன் லாலுக்கு கரகோஷம் எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்.