எழுத்தின் அளவு: அ+ அ- அ
டெல்லியில் கொட்டித் தீர்த்த கனமழைக்கு வீட்டின் மீது மரம் விழுந்தததில் தாய் மற்றும் குழந்தைகள் என 3 பேர் பலியாகினர்.
டெல்லியில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், திடீரென இடி, மின்னல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. விடாது கொட்டிய கனமழை காரணமாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கியது. துவாரகா, கான்புர், மின்டோ சாலை, லஜ்பத் நகர், மோடி பாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியதால் வாகனங்கள் மிதந்தபடி, மெதுவாக சென்றன.
சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து சாலைகளில் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புழுதிக் காற்று காரணமாக டெல்லியில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக, விமான சேவைகளின் விபரங்களை அறிந்து கொண்டு விமான நிலையத்திற்கு வருமாறு டெல்லி விமான நிலையம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் சனிக்கிழமை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, பிரச்னைக்குத் தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பலத்த காற்று காரணமாக துவாரகா பகுதி கார்காரி கால்வாய் கிராமத்தில் உள்ள பண்ணையில் இருந்த வீட்டின் மீது மரம் விழுந்ததில் ஒரு பெண் மற்றும் அவரது 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஹரியானாவிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன்காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியது. பகத்சிங் சவுக் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா பகுதியிலும் இன்று அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சியளித்தது.
ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் செக்டாரிலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்குள்ள செனாப் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.