இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் அடங்கிய குழு சென்ற டிராகன் விண்கலம், வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைந்தது. இதன் மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் தடம் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்தார்.
அமெரிக்காவில் உள்ள ஆக்ஸியம் ஸ்பேஸ் என்ற தனியார் நிறுவனம், நாசா, இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மற்றும் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு 4 விண்வெளி வீர்களை அனுப்பி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை தயாரித்தது. இதற்கு இஸ்ரோ சார்பில் செல்ல ககன்யான் திட்டத்துக்கு ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டிருந்த விமானப்படை பைலட்களின் குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா செய்யப்பட்டார். சுபான்ஷு சுக்லாவுடன் சேர்ந்து, அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோசி உஸ்னான்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோரும் விண்வெளி செல்ல திட்டமிடப்பட்டது.
கடந்த மாதம் 4 பேருடன் டிராகன் விண்கலம் விண்வெளி செல்லவிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு, மோசமான வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 6 முறை விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், டிராகன் விண்கலம், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து நேற்று நண்பகல் 12.01 மணிக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா பயணித்த விண்கலம் மணிக்கு 26 ஆயிரத்து 447 கிலோ மீட்டர் வேகத்தில் 28 மணி நேரம் பயணம் செய்து, பூமியில் இருந்து 418 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை இன்று மாலை 4 மணி அளவில் அடைந்தது. இதனை தொடர்ந்து டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்குள் அடியெடுத்து வைத்தனர். அவர்களை, அங்கிருந்த வீரர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரகமாக இணைந்ததை, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து பார்த்த சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் கைதட்டி பாராட்டி ஆனந்தக் கண்ணீர் விட்டனர். தேசிய கொடிகளை ஏந்தியபடி அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது பேட்டியளித்த சுபான்ஷு சுக்லாவின் தந்தை ஷம்பு தயாள் சுக்லா, மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும், கடவுளுக்கு மிகவும் நன்றி என்றும் கூறினார்.