சக்திக்கு எதிராக பேராடுவதாக ராகுல்காந்தி பேசியதால் சர்ச்சை

எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் நடைபெற்ற நிகழ்வில் சக்திக்கு எதிராக பேராடுவதாக ராகுல்காந்தி பேசியது குறித்தும், அது எப்படி பாஜகவின் தேர்தல் ஆயுதமாக மாறியது என்பது குறித்தும் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இந்திய ஒற்றுமை நீதி நடைபயணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. மும்பையில் நடைபெற்ற யாத்திரையின் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, இந்து மதத்தில் சக்தி என்ற ஒரு சொல் இருப்பதாகவும், தங்களின் இண்டியா கூட்டணி, சக்திக்கு எதிராக போராடுவதாகவும் பேசியிருந்தார். அந்த சக்தி என்ன செய்கிறது என்றால், வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையை விற்றுவிட்டதாகவும் கூறியிருந்தார். பிரதமர் மோடியின் அதிகாரம் குறித்தும் அந்த சக்திக்கு எதிராக இந்தியா கூட்டணி போராடுவதாகவும், இப்படி பொருள்படும் விதமாக ராகுல்காந்தி பேசியிருந்தார்.

இதையடுத்து, இந்து மதத்தில் உள்ள சக்தி என்ற தெய்வீக சொல்லை ராகுல்காந்தி பயன்படுத்தியதாக கூறி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் விமர்சனம் செய்யத் தொடங்கினார். ராகுல்காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தங்கள் போராட்டம் 'சக்தி'க்கு எதிரானது என இண்டியா கூட்டணி வெளிப்படையாக கூறுவதாக சுட்டிக்காட்டினார். தன்னைப் பொருத்தவரை, ஒவ்வொரு தாயும் ஒவ்வொரு மகளும் 'சக்தி'யின் ஒரு வடிவம் எனவும், தாய்மார்களை தாம் சக்தியாகவே வணங்குவதாகவும் பிரதமர் பேசினார். 

இது ஒருபுறம் இருக்க, ராகுல்காந்தியின் சக்தி பேச்சுக்கு எதிராக ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாசும் போர்க்கொடி தூக்கினார். நாரி சக்தி எனும் பெண்கள் சக்தி இந்து தர்மத்தின் பெருமை, சனாதன தர்மம் எனவும், தங்கள் தெய்வங்களுக்கு எதிராக பேசும் ராகுல்காந்தி போன்றவர்களை சிறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் ஆவேசப்பட்டார்.

சக்தி விவகாரம் தொடர்ந்து புகைந்து கொண்டிருப்பதை கண்ட ராகுல்காந்தியும், ஒரு வழியாக தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். பிரதமர் மோடி தனது வார்த்தைகளை திரித்து பேசியதாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, அதிகாரம் எனும் சக்தியின் முகமூடிதான் மோடி என பேசியதாக தெளிவுபடுத்தினார். அந்த சக்தியானது, சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள் என, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை சக்தி என குறிப்பிட்டதாக ராகுல்காந்தி விளக்கினார்.  

எந்த மத சக்தியையும் பற்றி தாம் பேசவில்லை எனக்கூறிய ராகுல்காந்தி, அநீதி, ஊழல் மற்றும் பொய்யின் 'சக்தி' பற்றிதான் பேசியதாகவும், அதனால்தான் நான் அந்த அதிகார சக்திக்கு எதிராக குரல் கொடுக்கும் போதெல்லாம், நரேந்திர மோடியும் அவரது பொய்கள் நிறைந்த இயந்திரமும் கொதிப்படைவதாக சாடினார். 

இருப்பினும், சேலம் பொதுக்கூட்டத்தில் சக்தி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பிரதமர் மோடி, இண்டியா கூட்டணியை கடுமையாக விமர்சித்தார். இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நமக்கு எல்லாம் அதன் சக்தி என்னவென்று தெரியும் எனவும், அதை அழிக்க வேண்டும் என்பதே நோக்கம் என்ற ரீதியில் இண்டியா கூட்டணி பிரச்சாரத்தை தொடங்கி இருப்பதாகவும் விளாசினார். இந்து மதத்தின் ஓம் சக்தி என்ற வார்த்தையை குறிப்பிட்ட பிரதமர் மோடி, காங்கிரஸ் திமுக கூட்டணி சக்தியின் வடிவத்தை, ஆன்மிகத்தை, சனாதனத்தை அழித்துவிடுவதாக கூறி வருவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறினார். 

இந்து தர்மத்தின் வழிபாட்டுக்குரிய சக்தியை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்துபோனார்கள் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, சக்தியின் அடையாளத்தை யாரெல்லாம் அழிக்க நினைக்கிறார்களோ, அவர்களை வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகம் மிக கடுமையாக தண்டிக்கும் எனவும் சூசகமாக கூறினார். 

இப்படி சக்தி என்ற வார்த்தையை மையப்படுத்தி வீசத் தொடங்கியுள்ள அரசியல் புயல், தேர்தல் கரையை கடக்கும்போது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Night
Day