மாதாவின் பிள்ளைகளுக்குள் பேதமா... பாவம் செய்யாதிரு மனமே...!

எழுத்தின் அளவு: அ+ அ-

190 ஆண்டுகளாக அனுபவித்து வரும் தீண்டாமை வன்கொடுமை. ஒரே மதமாக இருந்தாலும் பட்டியலின மக்கள் படும் அதிவயால், பொறுக்க முடியாத மக்கள், தங்கள் வாக்காளர் அட்டைகளை திருப்பி கொடுத்த அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் இரு தரப்பு சமுதாயத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரான பட்டியலின கிறிஸ்தவர்களிடம் தீண்டாமை சாதிய கொடுமைகளை ஏவி விடுவதாக கூறப்படுகிறது.

மாதா ஆலயத்தில் தனியாக அமர வைப்பது, செருப்பு அணிய விடாமல் தடுப்பது, கை பட்டாலே தீட்டு என்று ஒதுக்கி வைக்கும் பல கொடூரங்களை அரங்கேற்றி வருவதாக குமுறுகின்றனர் பட்டியலின கிறிஸ்தவர்கள். 

இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தங்களை கோயிலில் நுழைய விடாமல் தடுத்து வருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததின் பேரில் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்த உத்தரவிட்ட நிலையில் தனி சுடுகாடு, தனி கோயில், தனி திருவிழா என இன்று வரை தீண்டாமை தொடர்வதாக வேதனை தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

இதற்கு மேல் பொறுக்க முடியாத பட்டியலின மக்கள், இதற்கு முடிவு கட்டியே தீர வேண்டும் என்றும், தங்கள் பகுதியில் நிலவும் தீண்டாமையை நீக்கி பயமின்றி, அச்சமின்றி சராசரி வாழ்க்கையை வாழ வகை செய்ய வேண்டுமென அதிரடியாக கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓப்படைக்க வருகை தந்ததால், அந்த இடமே பெரும் பரபரப்புக்குள்ளானது.

இதனையடுத்து வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் நடத்திய சுமூக பேச்சுவார்த்தையின் பேரில் தேர்தல் முடிந்த பிறகு சுமூக முடிவெடுக்கப்படும் என்று அளித்த உத்தரவாதத்தின் பேரில் வருவாய் கோட்டாட்சியரிடம்  ஒப்படைக்கப்பட்ட தங்களது வாக்காளர் அடையாளர் அட்டையை மீண்டும் பெற்றுக் கொண்டு மக்கள் கலைந்து சென்றனர்.

varient
Night
Day